ரோய், ரூட் அபாரம்; ஒருநாள் தொடரும் இங்கிலாந்து வசம்

2056

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று 4ஆவது போட்டி  லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. ஒருநாள் தொடர் தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையில் தான் இந்தப் போட்டியில் களமிறங்கியது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து அணியின் தலைவர் இயோன் மோர்கன் முதலில் களத்தடுப்பை  தீர்மானம் செய்தார். அதன்படி இலங்கை அணியின் குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். ஆனால் அந்த ஜோடியால் இலங்கை அணிக்கு எதிர்பார்கப்பட்ட சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. போட்டியின் 9ஆவது பந்தில் தனுஷ்க குணதிலக துரிதமாக ஒரு ஓட்டத்தைப் பெற முற்பட்ட போது  குசல் பெரேரா துரதிர்ஷ்டமாக ரன் அவுட் முறையில் 1 ஓட்டத்தோடு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணிக்கு 10 விக்கட்டுகளால் சாதனை வெற்றி

ஆனால் அவரின் விக்கட்டைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலகவோடு ஜோடி சேர்ந்த வெறுமனே 21 வயது நிரம்பிய குசல் மெண்டிஸ் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் பதம் பார்த்து பவுண்டரி கோட்டுக்கு வெளியே அனுப்பிய வண்ணமே இருந்தார். அதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை விரைவாகக் கூடியது. அருமையாக ஆடிய மெண்டிஸ் தனது ஒருநாள் கிரிக்கட் வாழ்வில் 3ஆவது அரைச்சதத்தை, 9 பவுண்டரிகள் அடங்கலாக 44 பந்துகளில் அடைந்தார். அதன் பின்பும் அவரது அபார ஆட்டத்துக்கு எவ்விதக் குறையும் ஏற்படவில்லை. தொடர்ந்து சிறப்பாக அவர் விளையாட மறுமுனையில் தனுஷ்க குணதிலக தனது கைவரிசையைக் காட்டினார். இவர்கள் இருவரும் இலங்கை அணியை சிறந்த நிலைக்கு எடுத்துப் போக இயற்கை கடவுள் அதை நிறுத்தினார். போட்டியின் 19ஆவது ஓவரில் மழை பெய்தது. மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் போது  இலங்கை அணி 18.1ஓவர்கள் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

இந்த மழை சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நீடித்தது. இதனால் போட்டியின் ஓவர்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக போட்டி 42 ஓவர்களைக் கொண்ட போட்டியாகக் குறைக்கப்பட்டது. இதன் பின் மாலை 4.30 மணியளவில் போட்டி மீண்டும் ஆரம்பமானது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால் ஓட்டங்களை இன்னும் வேகமாகப் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக  ஜோடி மீண்டும் தமது ஆபாரத்தை வெளிப்படுத்த களம் நுழைந்தனர். ஆனால் வந்த வேகத்தில் தனது அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்க தனது சதத்தை பார்க்காமல் வேகமாக அடித்தாட முனைந்து குசல் மெண்டிஸ்  64 பந்துகளில் 13 நேர்த்தியான பவுண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதன் பின் உப தலைவர் தினேஷ் சந்திமால் ஆடுகளம் புக அவரோடு இணைந்து தனுஷ்க குணதிலக 22 ஓட்டங்களைப் பகிர்ந்த பின் 7 பவுண்டரிகள் அடங்கலாக 64 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரின் விக்கட் வீழ்த்தப்படும் போது இலங்கை அணி 23.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

இங்கிலாந்து 3ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

பின் தலைவர் மற்றும் உபதலைவர் இருவரும் ஒன்றிணைந்து வேகமாகவும் அவதானமாகவும் ஓட்டங்களைக் குவித்தனர். இவர்கள் 4ஆவது விக்கட்டுக்காக 87 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பின் சந்திமால் 51 பந்துகளில் ஒரு பவ்வுண்டரி 3 சிக்ஸர்கள் அடங்கலாக 63 ஓட்டங்களைப் பெற்ற பின் ஆட்டம் இழந்து வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்த பெருமைக்குரிய சீகுகே பிரசன்ன 9 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து வெளியேறினார்.  பின் இதில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றது. இறுதிவரை அற்புதமாக ஆடிய தலைவர் ஏஞ்சலோ மெதிவ்ஸ் ஆட்டம் இழக்காமல் 54 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற மறுபக்கம் தசுன் ஷானக ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டேவிட் வில்லே மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் தம்மிடையே தலா 2 விக்கட்டுகளைப் பங்கு போட்டனர்.

பின் 252 பந்துகளில் 308 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. முதல் விக்கட்டை சொற்ப ஓட்டங்களில் அந்த அணி இழந்தாலும் ஜோ ரூட் மற்றும் ஜேசன் ரோய் மிக அபாரமாக ஆடி அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 65 ஓட்டங்களையும் தலைவர் இயோன் மோர்கன் 22 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தார். தனி மரமாக ஓட்டங்களைக் குவித்த ஜேசன் ரோய் இந்தத் தொடரில் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து இறுதியாக 118 பந்துகளில் 13 பவுண்டரிகள்  மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 162 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இவரின் அபாரமான ஆட்டத்தின் உதவியோடு இங்கிலாந்து அணி 40.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்று 11 பந்துகள் மீதமிருக்க டக்வர்த் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் இலங்கை அணியைத் தோற்கடித்து 5 போட்டிகள் கொண்ட இந்த றோயல் லண்டன் ஒருநாள் தொடரில் 2ஆவது  வெற்றியைப்  பெற்று தொடரைக் கைப்பற்றியது.  இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக எவ்வித சந்தேகமும் இன்றி சதம் விளாசிய ஜேசன் ரோய் தெரிவானார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக அமைந்து இருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற்றும் 3 மத்தியதர வரிசை வீரர்கள் பொறுப்பாக ஆடி 50 ஓட்டங்களைப் பெற்றனர். ஆனால் இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. ஆரம்பத்தில் மொயின் அலியின் விக்கட்டை வீழ்த்தினாலும் அதன் பின் போதிய குறிப்பிட்ட இடைவெளிகளில் இலங்கை அணி பந்துவீச்சாளர்களால் விக்கட்டை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியாமல் போனது. இதனால் இப்போட்டி இலகுவாக இங்கிலாந்து பக்கம் திரும்பியது. அத்தோடு போட்டி நடைபெற்ற ஓவல் மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானமாக அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்