சர்ப்ராசின் சதம் வீணானது; இங்கிலாந்து தொடரில் முன்னிலை

271
Eng vs Pak 2nd ODI
Getty Image

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. அதன்படி அந்த அணியின் சமி அஸ்லாம் ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமி அஸ்லாம் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஷர்ஜீல் கான், அவரைத் தொடர்ந்து அடுத்து வந்த அணியின் தலைவர் அசார் அலி ஆகியோர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 2 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கட்டுகளை இழந்து தத்தளித்தது.

4-வது விக்கெட்டுக்கு பாபர் அசாம் உடன் விக்கெட் காப்பாளர் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு ஓட்டங்கள் சேர்த்தது. 4-வது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பாபர் அசாம் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சோயிப் மாலிக் 28 ஓட்டங்கள் எடுக்க சர்பிராஸ் கான் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 130 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் சேர்த்தார். இமாத் வாசிம் ஆட்டம் இழக்காமல் 70 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ஓட்டங்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 251 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் வுட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளும், பிளங்கெட் 2 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 252 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து போட்டியை 15 பந்துகள் மீதமியிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றி கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை  2-0 என்ற ரீதியில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 89 ஓட்டங்களையும், இயோன் மோர்கன் 68 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் சார்பாகப் பந்துவீச்சில் இமாத் வசீம் 2 விக்கட்டுகளையும் முஹமத் அமீர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 251/10 (49.5)

சர்ப்ராஸ் அஹமத் 105, இமாத் வசீம் 63*, பாபர் அசாம் 30, சுஹைப் மலிக் 28 – மார்க் வூட் 46/3, பென் ஸ்டோக்ஸ் 42/3, லியம் ப்ளங்கட் 50/2

இங்கிலாந்து – 255/6 (47.3)

ஜோ ரூட் 89, இயோன் மோர்கன் 68, பென் ஸ்டோக்ஸ் 42, மொயீன் அலி 21* – இமாத் வசீம் 38/2, முஹமத் அமீர் 39/1, ஹசன் அலி 52/1

இங்கிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்