இந்திய – இங்கிலாந்து 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து

India Tour Of England- 2021

305
Getty Image

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று மன்செஸ்டரில் ஆரம்பமாகவிருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவலில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா

இந்த நிலையில், இந்தியாஇங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மன்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாக இருந்தது.

முன்னதாக லண்டன் ஓவலில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், களத்தடுப்புப் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்படனர்.  

அத்துடன் அணியின் உடற்கூற்று மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டார்.

ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்று; பலர் தனிமைப்படுத்தலில்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதியானது

இந்திய அணி வீரர்களுடன் அவர் நெருங்கி பணியாற்றியதால் இந்திய வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்திய அணி வீரர்களின் பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பன ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, அனைத்து இந்திய வீரர்களுக்கும் நேற்று PCR பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது

இதனால், 5ஆவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி இன்று ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய வீரர் ரிஷப் பான்ட்டுக்கு கொரோனா தொற்று

இருப்பினும், இன்று காலை இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, தற்போதைய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடுவதில் அச்சத்துடன் இருப்பதாகவும், இம்மாதம் 19ஆம் திகதி இந்தியன் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாக இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது

ஆகவே, இவையனைத்தும் கருத்தில்கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

எனவே, பிசிசிஐ உடனான பேச்சுவார்த்தையை அடுத்து இந்தப் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

அத்துடன், இந்தப் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…