இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 1ஆவது போட்டியிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி 108 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் இன்று செம்ஸ்போர்ட் மைதானத்தில் 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெற்றி பெறலாம் என்ற உற்சாகத்துடன் ஆர்வத்துடனும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி களம் இறங்கியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
இதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக ஜோர்ஜ் ஹென்கின்ஸ் 144 பந்துகளை முகம் கொடுத்து 6 பவுண்டரிகள் அடங்கலாக 98 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பார்ட்லட் 68 பந்துகளை முகம் கொடுத்து 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 85 ஓட்டங்களையும், டொம் மொரேஸ் 68 பந்துகளை முகம் கொடுத்து 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்களையும், சென் மலிக் 10 பந்துகளை முகம் கொடுத்து 3 பவுண்டரிகள் அடங்கலாக 18 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாகப் பந்து வீச்சில் லஹிரு குமார் 4 விக்கட்டுகளையும், ஜெஹென் டேனியல் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
பின்னர் 316 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி 49.1 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்று 5 பந்துகள் மீதம் இருக்க 1 விக்கட்டால் திரில் வெற்றியைப் பெற்றது.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 96 பந்துகளை முகம் கொடுத்து 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 117 ஓட்டங்களையும் சம்மு அஷான் மிக மிக அருமையாக ஆடி 75 பந்துகளை முகம் கொடுத்து 8 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 77 ஓட்டங்களையும் டிலான் ஜயலத் 34 பந்துகளை முகம் கொடுத்து 9 பவுண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களையும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாகத் தலைவர் சரித் அசலன்க 35 பந்துகளை முகம் கொடுத்து 3 பவுண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாகப் பந்து வீச்சில் பென் க்ரீன் 3 விக்கட்டுகளையும் பென் டுஹிக் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று உள்ளதோடு தொடரையும் வென்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து U19 – 315/8 (50)
ஜோர்ஜ் ஹென்கின்ஸ் 98, ஜோர்ஜ் பார்ட்லட் 85, டொம் மொரேஸ் 70, சென் மலிக் 18, லஹிரு குமார் 56/4, ஜெஹென் டேனியல் 70/2
இலங்கை U19 – 318/9 (49.1)
அவிஷ்க பெர்னாண்டோ 117, சம்மு அஷான் 77, டிலான் ஜயலத் 41, சரித் அசலன்க 27, பென் க்ரீன் 77/3, பென் டுஹிக் 55/2
இலங்கை U19 அணி ஒரு விக்கட்டால் வெற்றி