ரொஷேன் சில்வாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நிறைவுக்கு வருகிறதா?

Sri Lanka tour of Bangladesh 2022

351

இலங்கை டெஸ்ட் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள, கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட தீர்மானித்துள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இதனால் அவருடைய சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரொஷேன் சில்வா இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இறுதியாக 2019ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். எனினும், கடந்த மூன்று வருடங்களாக குழாத்தின் மேலதிக வீரராக இணைக்கப்பட்டபோதும், அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சஞ்சு சம்சனை சுழலால் மிரட்டும் வனிந்து ஹஸரங்க!

ரொஷேன் சில்வா இலங்கை அணிக்காக முதற்தர போட்டிகளில் விளையாடி, கிட்டத்தட்ட 50 ஓட்டங்கள் என்ற சராசரியில் 9000 ஓட்டங்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், 230 பந்துகளுக்கு 109 ஓட்டங்களை குவித்திருந்தார். எனினும், இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வியை நோக்கிய போட்டியில், 74 ஓட்டங்களை பெற்று அணியை தோல்வியிலிருந்து மீட்ட இவருடைய இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு அதிகம் ஞாபகமூட்டும் போட்டியாக மாறியிருந்தது.

இறுதியாக இலங்கையில் நடைபெற்றுமுடிந்த தேசிய சுபர் லீக் தொடரில், இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு முன்னர் 4 போட்டிகளில் விளையாடியிருந்தார். இதில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக 174 ஓட்டங்களை குவித்தது மாத்திரமின்றி, 101 என்ற சராசரியில் 304 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தொடர்ந்தும் சுழல் பந்துவீச்சு தடுமாறிவந்த நிலையில், ரொஷேன் சில்வா சரியான வீரராக இருப்பார் என்ற விடயங்கள் வெளிவரத்தொடங்கியிருந்தன. எவ்வாறாயினும், அவருக்கு தொடர்ந்தும் விளையாட வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு வந்தது. எனவே, தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலினை கவனத்திற்கொண்டு, ரொஷேன் சில்வா இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து சரித் அசலங்க மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் நீக்கப்பட்டதை தொடர்ந்து, பங்களாதேஷ் தொடருக்கான 18 பேர்கொண்ட குழாத்தில் ரொஷேன் சில்வா இணைக்கப்படவிருந்தார். எனினும், இறுதி பதினொருவரில் விளையாடுவதற்கான வாய்ப்பில்லை என்ற அச்சத்தை உணர்ந்துள்ள ரொஷேன் சில்வா, பங்களாதேஷில் சென்று மேலதிக வீரராக இருப்பதை விடவும், வாய்ப்பு கிடைத்துள்ள லென்கஷையர் கழகத்தில் விளையாட முடியும் என எதிர்பார்த்துள்ளார்.

ரொஷேன் சில்வா தற்போது இங்கிலாந்தில் உள்ள காரணத்தால், இலங்கை தேர்வுக்குழு உறுப்பினர்கள், ரொஷேன் சில்வாவுக்கு பதிலாக கமிந்து மெண்டிஸை அணியில் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கமிந்து மெண்டிஸ் தேசிய சுபர் லீக்கில் அதீகூடிய ஓட்டங்களை பெற்ற வீரராக பதிவானார். கமிந்து மெண்டிஸ் ஆரம்பத்தில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணியின் தலைவராக செயற்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரொஷேன் சில்வா, தனது குடும்பத்துக்காகவும், குடும்பத்தின் தேவைக்காகவும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் லீக் கிரிக்கெட் விளையாட முடிவுசெய்வார் என

எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட்டானது, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைச்சதங்களை பெற்ற வீரர் ஒருவரின் சேவையை பெருவதற்கு தவறுகிறது.

இலங்கை அணி அடுத்ததாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது (பங்களாதேஷில் 2 டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் தலா 2 டெஸ்ட் போட்டிகள்). இந்தநிலையில், நாட்டைவிட்டு செல்ல தீர்மானித்துள்ள ரொஷேன் சில்வாவுடன், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் நேர்த்தியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தேசிய ஒப்பந்தம் ஒன்றை வழங்குவார்களா? என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<