நான்காவது தடவையாக தேசிய சாதனையை முறியடித்துள்ள எம்மா

194

இலங்கையைச் சேர்ந்த எம்மா டி சில்வா, பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் இந்த வருடம் நான்காவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்திருக்கின்றார்.

அமெரிக்காவில் வசித்து வருகின்ற எம்மா, ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்திற்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்ற “124 ஆவது பெரும் போட்டிகள்“ என்ற பெயரிலான விளையாட்டு நிகழ்வின் போதே புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.

நேற்று (7) இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வின் பரிதிவட்டம் எறிதலில் எம்மா 49.70 மீட்டர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்து தன்னுடைய முன்னாள் தேசிய சாதனையை 24 சென்ட்ரி மீட்டர் தூரத்தினால் தாண்டியிருக்கின்றார்.

 2020 இல் தியகமவில் சர்வதேச தரத்திலான விளையாட்டுத் தொகுதி

எம்மா அமெரிக்காவில் தொடர்ந்தும் இப்படி புதிய சாதனைகள் படைப்பது, தேசிய தேர்வாளர்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்ய அவர் தயராக இருக்கின்றார் என்பதனை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

மார்ச் மாத இறுதியில் அரிசோனா அரச பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் எம்மா பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் பத்மா நந்தனி ஜயசூரியவின் 12 வருடங்கள் பழமையான தேசிய சாதனையை 48.02 மீட்டர் தூரம் எறிந்து முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றின் போது, தான் முறியடித்திருந்த தேசிய சாதனையை 22 சென்ட்ரி மீட்டர்களால் தாண்டியதோடு அதே நிகழ்வில் மீண்டும் புதிதாக உருவாக்கிய தேசிய சாதனையை 1.44 மீட்டர்களால் தாண்டி எம்மா டி சில்வா ஒரே தடவையில் 48.24 மீட்டர், 49.46 மீட்டர் என இரண்டு தேசிய சாதனைகள் படைத்தார்.

அண்மைக் காலமாக மெய்வல்லுனர் அரங்கில் அபாரமாக செயற்பட்டு வருகின்ற 5 அடி 11 அங்குல உயரத்தைக் கொண்ட எம்மா டி சில்வா, கடந்த வருடத்தில் தனது சொந்த சாதனையாக இருந்த தூரத்தை இந்த ஆண்டு 5 மீட்டர்களால் தாண்டி இருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இந்த வீராங்கணை பெண்களுக்கான பரிதிவட்டம் நிகழ்வில், 50 மீட்டர்கள் தாண்டிய முதல் இலங்கை மங்கையாக மாற ThePapare.com தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.