ஓமானில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத்தின் அரையிறுதிக்கு இலங்கை வளர்ந்து வரும் அணி தகுதிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு லஹிரு உதார சிறந்த ஆரம்பத்தை பெற்றக்கொடுத்ததுடன், யசோத லங்கா அவருடன் நிதானமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தார்.
>>புதிய பருவத்திற்கான IPL தொடரில் ஆடுவாரா MS டோனி?
லஹிரு உதார 21 பந்துகளில் 35 ஓட்டங்களை விளாச, யசோத லங்கா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் பவன் ரத்நாயக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை வழங்க இலங்கை வளர்ந்து வரும் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.
பவன் ரத்நாயக்க இலங்கை அணிக்காக அதிகபட்சமாக 26 பந்துகளை எதிர்கொண்டு 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சஹான் ஆராச்சிகே 25 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிபோன் மொண்டல் மற்றும் ரெஜஹுர் ரஹ்மான் ராஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணி சயீப் ஹஸன் மற்றும் பர்விஸ் ஹொஷைன் எமோன் ஆகியோர் வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டனர்.
எனினும் 10 பந்துகளில் 24 ஓட்டங்களை விளாசி எமோன் ஆட்டமிழக்க, சயீப் ஹஸன் 20 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றிருந்த போது, உபாதை காரணமாக வெளியேறினார்.
இவர்கள் இருவரின் வெளியேற்றத்தின் பின்னர் இலங்கையின் பந்துவீச்சு பலமடைய, பங்களாதேஷின் மத்தியவரிசை வீரர்கள் பெரிதான ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தனர். இறுதியாக அபு ஹய்டர் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசிய போதும், பங்களாதேஷ் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த சிறப்பாக பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், ரமேஷ் மெண்டிஸ் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<