வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் ஓமானில்

Emerging Teams Asia Cup 2024

119
Emerging Teams Asia Cup 2024

ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் ACC) ஏற்பாடு செய்துள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ஆடவர்) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ளது.

6ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது முதல் தடவையாக T20 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உ ள்ள ஓமான் கிரிக்கெட் அகடமி மைதானத்தில் நடைபெறும்.

இம்முறைக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளின் A அணிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (யுஏஇ), ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.

இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவதுடன், குழுநிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இதில் ஒக்டோபர் 25ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும், ஒக்டோபர் 27ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறும்.

இதன்படி, குழு A இல் இலங்கை A, பங்களாதேஷ் A, ஆப்கானிஸ்தான் A மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் குழு B இல் இந்தியா A, பாகிஸ்தான் A, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, இம்முறை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் நாளான்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் போட்டியில் பங்களாதேஷ் A அணியும், ஹொங்கொங் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் பலப்பரீட்சை நடத்தும்.

இலங்கை A அணியைப் பொறுத்தமட்டில் ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள 2ஆவது லீக் போட்டியில் ஹொங்கொங் அணியையும், ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் A அணியையும் சந்திக்கவுள்ளது.

அதேநேரம், இந்தியா A – பாகிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற அங்குரார்ப்பண வளர்ந்து வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றது. இறுதியாக கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

இதனிடையே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே இரண்டு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. பாகிஸ்தான் 2019 இல் தனது முதல் பட்டத்தை வென்றது, இலங்கை 2017 மற்றும் 2018 இல் சம்பியன் ஆனது.

போட்டி அட்டவணை

  • ஓக்டோபர் 18
    • பங்களாதேஷ் A எதிர் ஹொங்கொங்
    • இலங்கை A எதிர் ஆப்கானிஸ்தான் A
  • ஓக்டோபர் 19
    • ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஓமான்
    • இந்தியா A எதிர் பாகிஸ்தான் A
  • ஓக்டோபர் 20
    • இலங்கை A எதிர் ஹொங்கொங்
    • பங்களாதேஷ் A எதிர் ஆப்கானிஸ்தான் A
  • ஒக்டோபர் 21
    • பாகிஸ்தான் A எதிர் ஓமான்
    • இந்தியா A எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
  • ஓக்டோபர் 22
    • ஆப்கானிஸ்தான் A எதிர் ஹொங்ககொங்
    • இலங்கை A எதிர் பங்களாதேஷ் A
  • ஓக்டோபர் 23
    • பாகிஸ்தான் A எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
    • இந்தியா A எதிர் ஓமான்
  • ஓக்டோபர் 25 – அரையிறுதிப் போட்டி
  • ஓக்டோபர் 27 – இறுதிப்போட்டி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<