இளம் வீரர் எம்புல்தெனியவை இழந்தது இலங்கை அணி

1613

தென்னாபிரிக்காவுக்கு எதிராக போர்ட் எலிசபெத் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்,  பிடியெடுப்பு ஒன்றை எடுக்க முயற்சித்த இலங்கை அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான லசித் எம்புல்தெனிய விரல் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை அணிக்காக விளையாட கிடைத்தமை அதிஷ்டம்: லசித் எம்புல்தெனிய

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க …

இதனால் லசித் எம்புல்தெனிய, தற்போதைய தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியிருப்பதோடு, அடுத்த ஆறு வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் இழந்துள்ளார்.

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனக்கு ஓவர்வீச வழங்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் எம்புல்தெனிய, தென்னாபிரிக்க வீரர் ககிஸோ றபாடாவை நோக்கி பந்து வீசியிருந்தார். வீசப்பட்ட பந்து றபாடாவினால்  ஆடப்பட்டு பிடியெடுப்பு ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம், எம்புல்தெனியவிற்கே உருவாகியிருந்தது.

இந்த பிடியெடுப்பை எடுக்க முயற்சித்த போது பந்து எம்புல்தெனியவின் இடது கட்டை விரலை கடுமையாக தாக்கியது.  பந்து பட்ட மறுகணத்திலேயே துடித்துப்போன எம்புல்தெனிய மைதானத்தினை விட்டு வெளியேறியதுடன் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எம்புல்தெனியவின் கட்டைவிரல் பிறழ்வு ஒன்றை சந்தித்திருப்பது உறுதியானது.

இந்த பிறழ்வினை உடனடி சத்திரசிகிச்சை ஒன்றின் மூலமே சரிசெய்ய முடியும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்த நிலையில், எம்புல்தெனிய தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியிருப்பதோடு,  அடுத்த ஆறு வாரங்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாத நிலையையும் சந்தித்துள்ளார்

தென்னாபிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுகளை சாய்த்திருந்த எம்புல்தெனிய, துடுப்பாட்டத்திலும் போராட்டம் ஒன்றை காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் எம்புல்தெனியவின் இழப்பு இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

எம்புல்தெனிய இல்லாத நிலையில் இலங்கை அணி, இந்த டெஸ்ட் போட்டியில் தமது முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால், கசுன் ராஜித மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோரினையே முழுமையாக நம்பியிருக்கின்றது.

அதேநேரம், இந்த டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் வீரர்களில் தனன்ஜய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் இலங்கை அணியின் பகுதிநேர சுழல்வீரர்களாக செயற்படகூடியவர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து சுழல் பந்துவீச்சுத் துறைக்கு ஒரு முக்கிய பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெற்றுவருகின்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்துள்ள தென்னாபிரிக்க அணி 222 ஓட்டங்களை குவித்திருப்பதோடு, பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இலங்கை அணி ஆட்டத்தின் முதல்நாள் நிறைவில் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<