அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கால்பந்து போட்டிகளில் 24 அணிகள் பங்குகொள்ள இருந்தன. குறித்த போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஏற்கனவே டிவிஷன் I இல் இருந்த 11 பாடசாலை அணிகள் டிவிஷன் II இற்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
இந்த தரவிறக்கத்தை இலங்கை பாடசாலைகளுக்கான கால்பந்து சங்கம் (SLSFA) மேற்கொண்டுள்ளது.
டி மெசனொட் கல்லூரி மற்றும் 2014ஆம் அண்டு அகில இலங்கை கால்பந்து போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்ற புனித மேரிஸ் கல்லூரி (நீர்கொழும்பு) போன்ற, கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற பாடசாலை அணிகளும் டிவிசன் II க்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாடசாலைகளுக்கான கால்பந்து சங்கத்தின் (SLSFA) செயலாளர் நலக்க திசாநாயக்க இது குறித்து thepapare.com இடம் பிரித்தியேகமாகக் கூறுகையில், ”இந்த பாடசாலைகளின் விளையாட்டு தகுதி அடிப்படை மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட போட்டிகளில் அவ்வணிகள் பங்குகொள்ளாமை போன்ற காரணிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்பொழுது முக்கிய காரணியாகப் பார்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தரமிறக்கபட்ட ஏனைய அணிகளான டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (கொழும்பு), ஸாஹிரா கல்லூரி (மாவனல்லை), வெஸ்லி கல்லூரி (கொழும்பு), தர்மராஜா கல்லூரி (கண்டி), புனித மேரிஸ் கல்லூரி (நீர்கொழும்பு), புனித தோமஸ் கல்லூரி (மாத்தறை), டி மெசனொட் கல்லூரி (கந்தானை), இந்துக் கல்லூரி (கொழும்பு), புனித மேரிஸ் கல்லூரி (சிலாபம்), நாலந்த கல்லூரி (கொழும்பு), மற்றும் புனித மேரிஸ் கல்லூரி (கேகாலை) ஆகிய அணிகள் அடங்குகின்றன.
அதேநேரம், 2015ஆம் ஆண்டு டிவிசன் ll இல் சம்பியன் பட்டம் வென்ற மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரியுடன் இரண்டாம் இடம் பெற்ற ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி என்பன டிவிசன் l க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்பொழுது டிவிசன் l இல் உள்ள 14 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு தலா 7 அணிகள் பங்குகொள்ளும் விதத்தில் போட்டிகள் இடம்பெறும்.
அதன்படி குழு A இல் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி (கட்டுநேரிய), புனித ஜோசப் கல்லூரி, இசிபத்தன கல்லூரி, கிங்ஸ்வூட் கல்லூரி, விக்கிரமபாகு கல்லூரி (கம்பளை) மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகள் உள்ளடங்கும்.
B குழுவில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி, ஸாஹிரா கல்லூரி (கொழும்பு), புனித பேதுரு கல்லூரி, ரோயல் கல்லூரி, ஹோலி க்ரொஸ் கல்லூரி (களுத்தறை), லும்பினி கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி அணிகள் அடங்கும்.
குழு நிலை போட்டிகள் அனைத்தையும் ஒக்டோபர் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 11ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழு மட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும். பின்னர் டிசம்பர் 3ஆம் திகதி அடுத்த சுற்றுப் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த 14 பிரபல பாடசாலைகளும் கால்பந்து போட்டிகளில் உள்ள முன்னணி அணிகள் என்பதால், இம்முறை இன்னும் இரு மாதங்களுக்கு பலத்த மற்றும் தீர்க்கமான பாடசாலை மட்ட கால்பந்து போட்டிகளை எதிர்பார்க்கலாம்.
A பிரிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி (கட்டுனேறிய), புனித ஜோசப் கல்லூரி, இசிபத்தன கல்லூரி, கிங்ஸ்வூட் கல்லூரி, விக்ரமபாகு கல்லூரி (கம்பளை), புனித பெனடிக் கல்லூரி
B பிரிவு – ஹமீத் அல் ஹுசைன் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, ரோயல் கல்லூரி, ஹோலி க்ரொஸ் கல்லூரி (களுத்தறை), லும்பினி கல்லூரி, ஆனந்த கல்லூரி.
குறித்த போட்டிகளின் நேரடிக் காட்சிகள் மற்றும் செய்திகள் ThePapare.com இணையத்தளத்தினுடாக வழங்கப்படும்.