இலங்கை கிரிக்கெட் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமென தேர்தல் குழு அறிவிப்பு

230

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் காலவறையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும், தேர்தல் திட்டமிட்டபடி உரிய தினத்தில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழு தீர்மானித்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதில் தொடரும் சிக்கல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை…

எனினும். நாட்டில் தற்போது நிலவி வருகின்ற அரசியல் ஸ்தீரத்தன்மை உள்ளிட்ட காரணங்களினால் விளையாட்டுத்துறை அமைச்சரின் பதவிக்கு உயர்நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையின் காரணமாக குறித்த தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போகலாம் என ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்தே இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழுவினால் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் அறிக்கையொன்று நேற்று (13) வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பிற்போடுவதற்கான எந்தவொரு சட்டரீதியான அதிகாரமும் தேர்தல் குழுவுக்கு கிடையாது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சங்கங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த செய்தியை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம் என இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை முன்னிட்டு 2018 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியிடப்பட்ட 2089/56ஆம் இலக்க  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை ரத்துச் செய்வதற்கோ அல்லது பிற்போடுவதற்கோ எவ்வித சட்டவிதிகளும் இல்லை என்பதை தேர்தல் செயற்குழு வலியுறுத்துகின்றது.

இந்த அறிவித்தலுக்கு அமைய உறுப்பினர்களின் தகுதி பிரகாரமும் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளின் பிரகாரமும் தேர்தல் குழு தனது செயற்பாடுகளைத் தொடரும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் பி. டபிள்யூ. டி. சி ஜயதிலக்க, மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஐ.எம் அபேரத்ன (உறுப்பினர்), முன்னாள் அமைச்சு செயலாளர் சுனில் சிறிசேன (உறுப்பினர்) ஆகியோரைக் கொண்ட குழு சார்பில் அதன் தலைவர் ஜயதிலக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை…

இதேநேரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதற்காக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முதுகலவுக்கும், இலங்கை கிரிக்கெட் தேர்தல் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த 12ஆம் திகதி விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முன்வைக்கப்படுகின்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கான அதிகாரம் விளையாட்டுத்துறை யாப்பின் பிரகாரம் யாருக்கு உள்ளது என சட்டமா அதிபரிடம் ஆலோசனையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகச் சபை கடந்த ஜுலை மாதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்திருந்தது.

எனவே, ஓரிரு சங்கங்களின் வேட்பு மனுக்கள் ரத்துச் செய்யப்பட்டமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்துவதை தடுப்பதற்காக ஏதாவது ஒரு தரப்பினரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது குறித்து தெளிவுபடுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்புமிக்க அதிகாரியும், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகிய இருவரும் ஐ.சி.சி இன் அதிகாரிகளை டுபாயில் சந்திக்கவுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<