பங்களாதேஷில் இம்மாதம் நடைபெறவுள்ள பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த் நட்சத்திர வீரர்களான அஸ்லம் சஜா மற்றும் மொஹமட் ஸபிஹான் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன், குறித்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு வீரர்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடரின் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை போட்டித் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தேசிய கபடியில் அம்பாறை, கிளிநொச்சி அணிகள் சம்பியன்
- இலங்கை கபடி அணியின் பயிற்சியாளரானார் பாஸ்கரன்
- இந்தியன் கபடி லீக் ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் இலங்கையர் அன்வர்
இந்த நிலையில், பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணிக்கான தெரிவு நேற்று முன்தினம் (07) கொழும்பு – டொரிங்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ள அரங்கில் இடம்பெற்றது.
இலங்கையின் முன்னணி கபடி வீரர்கள் பங்கேற்ற இந்த தெரிவுப் போட்டியில் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களான அஸ்லம் சஜா மற்றும் மொஹமட் ஸபிஹான் ஆகிய இருவரும் இலங்கை அணிக்கு தெரிவு செய்யபட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களும் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்கள் என்பது சிறப்பம்சமாகும். இதில் இலங்கை தேசிய கபடி அணிக்காக அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வருகின்ற அஸ்லம் சஜா, பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணியின் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற உலக கனிஷ்ட கபடி சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அஸ்லம் சஜா, 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கபடி அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.
இறுதியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பிலும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், குறித்த போட்டித் தொடரில் சிறந்த Raider இற்கான விருதையும் தட்டிச்சென்றார்.
குறித்த தொடரில் இலங்கை கபடி அணி, வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதேவேளை, பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரராக பெயரிடப்பட்டுள்ள மொஹமட் ஸபிஹான், 2018இல் உலக கனிஷ்ட கபடி சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இதனிடையே, பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் மேலும் 6 தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மட்டக்களப்பைச் சேர்ந்த எல். தனுஷன், ஆர். பென்சி,
ஏ. மோகன்ராஜ் மற்றும் எல் அனோஜ் ஆகிய வீரர்களும், வடக்கைச் சேர்ந்த வசந்த் குமார், டி. தினேஷ் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான நடுவர் குழுவில் இலங்கையைச் சேர்ந்த மொஹம்மட் இஸ்மத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை சாஹிரா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும், இலங்கை கபடி கூட்டமைப்பின் ‘A’ பிரிவு நடுவர் மற்றும் பயிற்றுவிப்பாளரும், அம்பாறை மாவட்ட கபடி சங்கத்தின் செயலாளரும், பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை கபடி அணியின் தொழில்நுட்ப அதிகாரியும், நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக செயலாளரும் ஆவார்.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…