ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன் கார்டன் பெறப்போகிறது.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளை நேரில் வந்து கண்டுகளிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் அனைத்து கிரிக்கட் சபைகளும் கவலையடைந்துள்ளது. ரசிகர்களை மைதானத்திற்கு அதிக அளவில் கொண்டு வர அவுஸ்திரேலியா முதன்முதலாக ஒரு முயற்சி எடுத்தது. அதுதான் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட். கடந்த ஆண்டு அடிலெய்டில் முதன்முறையாக நடைபெற்ற பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்புக் கிடைத்தது. பகல்- இரவு டெஸ்டில் (இளஞ் சிவப்பு) பிங்க் பந்து பயன்படுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகல்- இரவு போட்டியை நடத்த அவுஸ்திரேலியா தீவிரம் காட்டிவருகிறது.
இதே வழியில் இந்தியாவும் தற்போது களம் இறங்கியுள்ளது. இந்த வருடம் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அப்போது ஒரு போட்டி பகல்- இரவு போட்டியாக நடத்தப்பட இருக்கிறது.
அதற்கு முன்னோட்டமாக இந்தியாவின் உள்ளூர் தொடரான சூப்பர் லீக் இறுதிப்போட்டியை பகல்- இரவு போட்டியாக நடத்த மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தப் போட்டி வருகிற 17ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நான்கு நாட்கள் இந்தப் போட்டி நடைபெறும்.
இது குறித்து மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி கூறுகையில் ‘‘இந்த முயற்சி இந்தியா பகல்- இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முக்கிய உதவியாக இருக்கும். பகல்-இரவு போட்டியில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிறப் பந்தில் விளையாடுவது கிரிக்கட் முன்னோட்டத்திற்கான வழியாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் புகழ் படிப்படியாக குறைந்து வருகிறது. இதை தடுக்க நாம் ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். அவுஸ்திரேலியாவில் பிங்க் பந்து போட்டி நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்தது. அந்த மாற்றத்தை நாமும் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். சூப்பர் லீக் இறுதிப்போட்டி சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.’’ என்றார்.
இதன்மூலம் முதல் பகல்- இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் ஆசிய மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன் கார்டன் பெறுகிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்