உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் பிரபலமாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், அதிகமான பார்வையாளர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கவும் முடிவு செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் சபை, டி20 போட்டிகளுக்கு பதிலாக ஒரு இன்னிங்ஸுக்கு 100 பந்துகள் என்ற அடிப்படையில் புதுமையான போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.
இதன்படி, ஆடவர், மகளிர் பிரிவுகளாக நடத்தப்பட உள்ள இந்த தொடரில் தலா 8 அணிகள் பங்கேற்க உள்ளன. 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும், 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1979-80 முதல் எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 6 பந்துகள் கெண்ட ஓவர்கள் தான் வீசப்படுகின்றன. ஆரம்பத்தில் 5 நாட்கள் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை ஓரம் கட்டி, 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகள் அறிமுகமாகியிருந்தன. அதிலும் முடிவு கிடைக்க ஒரு நாள் தேவைப்படுகிறது என்பதாலும், சில நேரங்களில் மழை போன்ற இயற்கை இடையூறுகளாலும் போட்டி தடைப்படுவதால், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
இலங்கை அணியின் அடுத்த சுழல்பந்து பயிற்சியாளர் யார்?
அதன்பின் கிரிக்கெட் போட்டியை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் நோக்கில் 20 ஓவர்கள் (120 பந்துகள்) கொண்ட போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த போட்டிகள்தான் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இன்றுவரை சந்தோஷப்படுத்தி வருகிறது. ஏறக்குறைய ஒரு சினிமா பார்ப்பது போன்று ஒரு போட்டிக்கான முடிவை இரண்டரை மணி நேரத்தில் ரசிகர்கள் அறிந்துவிடுகிறார்கள்.
இதற்கிடையே ஹொங்காங்கில் 6 ஓவர்கள் கிரிக்கெட், டுபாயில் டி10 கிரிக்கெட் என்றெல்லாம் அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவிலை. அதற்கு காரணம் நிலையான கிரிக்கெட் அமைப்பு அதை அறிமுகம் செய்யாததாகும்.
ஆனால், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபை வித்தியாசமாக 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை இன்னும் சுவாரஷ்யமாக்கவும், ரசிகர்களை கவர்ந்திழுக்கவும் இந்தப் போட்டியை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது 15 ஓவர்கள் ஓவருக்கு 6 பந்துகள் வீதம் இருக்கும். 16ஆவது ஓவரில் மட்டும் 10 பந்துகள் வீசப்படும். வழக்கமான டி20 போட்டியில் 120 பந்துகள் வீசப்படும் நிலையில், இதில் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும்.
அத்துடன், டி20 போட்டிகளை விட 40 பந்துகள் குறைவாக வீசப்படவுள்ள இப்போட்டிகள் 2 அரை மணி நேரத்தில் நிறைவுக்கு வரவுள்ளது. இதன்படி, மாலை நேரப் போட்டிகளை 2.30 மணிக்கும், இரவு போட்டிகளை 6.30 மணிக்கும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 13 வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், வைல்ட் கார்ட் முறையில் மேலும் இரு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய வகை கிரிக்கெட்டை அனுமதிக்கக் கோரி எம்.சி.சி நிர்வாகத்திடம் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டொம் ஹெரிசன் கூறுகையில், ”கிரிக்கெட் விளையாட்டை இன்னும் உற்சாகமாக விளையாடவும், மகிழ்ச்சிகரமான போட்டியாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்ற இந்த 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறோம்.
இந்த போட்டி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அனைத்து நாடுகளையும் அழைத்து இடம்பெறவுள்ளது. அதிலும் சவுத்ஹாம்டன், பேர்மிங்ஹாம், லீட்ஸ், லண்டன், மென்செஸ்டர், கார்டிப், நொட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.
இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு
2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான போட்டிகளை பி.பி.சி நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டி நிச்சயம், அனைத்து கிரக்கெட் ரசிகர்களையும், குடும்பத்தையும் ஈர்க்கும். இளம் ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க ஆர்வப்படுவார்கள், கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் அதிகமாகும்” எனத் தெரிவித்தார்.
இந்த 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து வீரர்களும் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில், ”இந்த கிரிக்கெட் போட்டியை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். மற்ற போட்டிகளை விடவும் இந்தப் போட்டி வித்தியாசமானதாகவும், ஆர்வமாகவும் இருக்கும். 15 ஓவர்கள், கடைசி ஓவரில் 10 பந்துகள் என்பது கேட்கவே உணர்ச்சிகரமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
2003ஆம் ஆண்டு டி20 கப் என்ற பெயரில் இருபது ஓவர்களைக் கொண்ட போட்டியை இங்கிலாந்து அறிமுக்கப்படுத்தியது. அதன் அடுத்த கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு பல முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துக்கள் ஆதரவாகவும் தெரிவிக்கப்பட்டுவருகின்ற அதேநேரம், கடும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.