பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை

330
Getty Images

இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தினையும் இரத்துச் செய்திருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அறிவித்திருக்கின்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் இரத்து

இங்கிலாந்தின் ஆடவர் கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இரண்டு T20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி முடிவினால் இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் விளையாடப்பட முடியாத துர்ப்பாக்கிய நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, பாகிஸ்தானுக்கான தமது அணிகளின் தொடர்களை இரத்துச் செய்தமைக்கு கொவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற இப்போதைய நிலைமைகளில் தமது வீர வீராங்கனைகளின் மனநிலைமையினை பிரதான காரணமாக காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி

மூன்று நாட்களுக்கு முன்னர் ஒருநாள், T20 தொடர்களில் விளையாட பாகிஸ்தான் வந்திருந்த நியூசிலாந்து அணியும் தமது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக ஒருநாள் தொடர் ஆரம்பமாக இருந்த இறுதி நேரத்தில் தாம் விளையாடவிருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தினையும் இரத்துச் செய்தது. இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்திருப்பது கிரிக்கெட் இரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிருப்தியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதோடு இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கான தமது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை இரத்துச் செய்திருப்பது 2009ஆம் ஆண்டு லாஹூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், சர்வதேச கிரிக்கெட்டினை தமது நாட்டுக்கு மீண்டும் கொண்டு வர முயற்சிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு மிகப் பெரிய பின்னடைவினைவும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…