மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பன்பரி அணிக்கும் இலங்கை அபிவிருத்தி அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில், கடந்த போட்டியில் படுதோல்வியுற்றிருந்த இங்கிலாந்து பன்பரி அணி மீண்டெழுந்து 99 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.
இளம் வீரர்களின் சிறப்பாட்டத்தால் ஆசியக் கிண்ண அரையிறுதிக்குள் இலங்கை
இரண்டாவது போட்டியிலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பன்பரி அணித் தலைவர் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த களத்தில் மீண்டும் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி வீரர்கள் இம்முறை துடுப்பாட்டத்தில் ஏமாற்றாமல் குறித்த 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பதிவு செய்தனர்.
அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜக் ஹேய்னஸ் அவ்வணி சார்பாக 93 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். அதேநேரம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் டார்சி 36 ஓட்டங்களை பெற்று அணிக்கு பங்களிப்புச் செய்தார். அதேநேரம், பன்பரி அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய யசிறு கதுரியாரச்சி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
அதனையடுத்து, ஓரளவு கடினமான 245 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அபிவிருத்தி அணி, இங்கிலாந்து பன்பரி அணியின் அதிரடிப் பந்து வீச்சில் சிக்குண்டு 37.2 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அபிவிருத்தி அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக பவன் ரத்நாயக்க மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் 38 ஓட்டங்களை பதிவு செய்தார். எனினும், ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் இலங்கைத் தரப்பு 99 ஓட்டங்களால் படுதோல்வியுற்றது.
அதேநேரம், இங்கிலாந்து பன்பரி சார்பாக இன்றைய தினம் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த லூயிஸ் கொந்த்ஸ்வொர்த் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார். அந்த வகையில் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் போட்டியில் தோல்வியுற்றிருந்த இங்கிலாந்து பன்பரி, இலங்கை அபிவிருத்தி அணியை வெற்றிக்கொண்டு தொடரை சமப்படுத்தியது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து பன்பரி 16 வயதின் கீழ் அணி: 245 (50) ஜக் ஹேய்ன்ஸ் 93, சாம் டார்சி 36, அகமதுல்லா கத்ரி 25, யசிறு கதுரியாரச்சி 4/31, சந்துன் மெண்டிஸ் 3/16, லஹிரு மதுஷங்க 2/63
இலங்கை அபிவிருத்தி 16 வயதின் கீழ் அணி: 146/10 (37.2) பவன் ரத்நாயக்க 38, நவோத் பரணவிதான 30, லூயிஸ் கொந்த்ஸ்வொர்த் 3/17