இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில்

249
ECB announces schedule
@GETTY IMAGES

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.  

>> இங்கிலாந்து செல்ல அனுமதி வழங்கிய மே.தீவுகள் கிரிக்கெட் சபை

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் இடம்பெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் தடைப்பட்டன. இதில், இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் ஜூன் மாதம் விளையாடவிருந்த டெஸ்ட் தொடரும் அடங்கும். தற்போது கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்து வரும் நிலையில், மீள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையே இங்கிலாந்து கிரிக்கெட் சபை மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர், நடைபெறவுள்ள முதல் சர்வதேச தொடராக, இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் அமையவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் ஆரம்பமாகின்றது. பின்னர், தொடரின் இரண்டாம், மூன்றாம் போட்டிகள் முறையே ஜூலை 16ஆம், 24ஆம் திகதிகளில் மன்செஸ்டர் நகரில் நடைபெறவிருக்கின்றன.  

இதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் பார்வையாளர்கள் இன்றி நடாத்த தீர்மானம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியினர், இம்மாதம் 09ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகவுள்ளதோடு, அங்கே சென்று 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் முகாமிலும் பங்கேற்கவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இந்த டெஸ்ட் தொடருக்காக மன்செஸ்டர் நகரில் மூன்று வாரங்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். இதேநேரம், இந்த டெஸ்ட் தொடரின் போது மேலதிக பயிற்சிகளுக்காக பர்மிங்காமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானம் உபயோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> கொரோனா வைரஸுக்கு மாற்று வீரரை அனுமதிக்க இங்கிலாந்து வேண்டுகோள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த டெஸ்ட் தொடருக்காக பயன்படுத்தவுள்ள மைதானங்கள் அனைத்தும் அங்கிருக்கும் மருத்துவ வசதிகள் அடிப்படையிலும், உயிரியல் பாதுகாப்பு அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிட்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் அதிகாரிகளில் ஒருவரான ஸ்டீவ் எல்வேர்த்தி, இந்த டெஸ்ட் தொடரின் போது வீரர்களினதும், ஏனைய ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்வதே தமது பிரதான நோக்கமாக இருக்கும் என சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

”எங்களது பிரதான நோக்கம் (இந்த டெஸ்ட் தொடருடன் தொடர்புடைய) அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்குவதாகும்.”

”நாங்கள் ஒவ்வொரு நாளும் எமது நாட்டு அரசாங்கத்துடனும், எங்களது மருத்துவ குழுவுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றோம். அவர்கள் எங்களுக்கு மிகச் சிறந்த ஆதரவினை வழங்குகின்றனர். மேலும், இந்த சுற்றுத் தொடருக்காக நாம் தெரிவு செய்துள்ள திகதிகளுக்காக எமது நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.”

இன்னும் கருத்து வெளியிட்ட ஸ்டீவ் எல்வேர்த்தி இந்த டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் நிர்வாகம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றார்.

”நாங்கள் இந்த டெஸ்ட் தொடரினை உண்மையாக மாற்றுவதற்கு மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபை வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இன்னும் நாங்கள் கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் வாரங்களில் மீளக் கொண்டுவர எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகின்றோம்.” 

இந்த டெஸ்ட் தொடர் ஒரு புறமிருக்க, இங்கிலாந்து கிரிக்கெட் சபை தமது கிரிக்கெட் அணி பங்கெடுக்கும் ஏனைய தொடர்களுக்கான திகதிகளை விரைவில் அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<