20 வயதுக்கு கீழ்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கல்முனை வலயத்திலுள்ள மைதானங்களில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இடம்பெற்றது.
இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலும், காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கிண்ணியா மத்திய கல்லூரியும், கிண்ணியா அரபா மகாவித்தியாலமும் தகுதிபெற்றது.
இறுதிப் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா அரபா மகா வித்தியாலயம் 1 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சமபலத்துடன் விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அரபா அணியினர் ஏ.எச்.ஏ வஸீம் மூலம் பெற்றுக் கொண்ட கோல் மூலம் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற கிண்ணியா அரபா மகா வித்தியாலயமும், இரண்டாமிடத்தைப் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரியும் அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையும் பங்கு கொண்டது.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் போட்டியின் நேரம் முடிவடையும் போது இரு அணிகளும் கோல் எதனையும் பெறவில்லை. இதனால் பெனால்டி உதை வழங்கப்பட்டு 6 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இதற்கு முதல் காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிண்ணியா அரபா மகா வித்தியாலய அணியும், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியும் மோதியது.
இதில் கிண்ணியா அரபா மகாவித்தியாலய அணி 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா மத்திய கல்லூரி அணியும், ஏறாவுர் அலிகார் தேசிய பாடசாலை அணியும் மோதியது. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில் இரண்டாவது பாதியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதிப் போட்டியில் அதிதிகளாக கலந்து கொண்ட கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம் இப்றாஹீம், உடற் கல்வி ஆசிரியர்களான ஏ. ஜாபிர் கபூர், ஏ.எம். அன்சார், ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்தலைவர் ஏ.எச். ஹம்சா சனூஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
இறுதிப்போட்டியில், பிரதான மத்தியஸ்தராக ஏ. ஜப்ரான் கடமையாற்றியதுடன் உதவி மத்தியஸ்தர்களாக ஏ.டபிள்யு.எம் றிபாஸ், எம்.எம்.எம் றியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.
18 வயதுக்கு கீழ்
இதில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலும், மருதமுனை மஸூர் மௌலானா மைதானத்திலும் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு கிண்ணியா மத்திய கல்லூரியும், திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா மத்திய கல்லூரி 1 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சமபலத்துடன் விளையாடிய போதிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் கோல் ஒன்றினை அடித்து வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரியும் இரண்டாமிடத்தைப் பெற்ற திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியும் அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயமும் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியும் பங்கு கொண்டது.
மிக விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சிவானந்தா வித்தியாலயம். வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இதற்கு முதல் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணியும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய அணியும் மோதியது.
இதில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி 1 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. இரண்டு அணிகளும் பலமாக மோதிக் கொண்ட போதிலும் இறுதி நேரத்தில் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி மருதமுனை மஸூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி அணியும், திருகோணமலை சென். ஜோசப் கல்லூரி அணியும் மோதியது.
இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில் இரண்டாவது பாதியில் திருகோணமலை சென். ஜோசப் கல்லூரி அணி 1-0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதிப்போட்டியில் பிரதான மத்தியஸ்தராக எஸ்.எம். உபைதீன் கடமையாற்றியதுடன் உதவி மத்தியஸ்தர்களாக சீ.எம். அஸ்கர், எ. வாரீஸ் ஆகியோர் கடமையாற்றினர்.
16 வயதுக்கு கீழ்
இதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்திலும், கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையிலும் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு மண்டுர் சக்தி மகாவித்தியாலயமும், கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயமும் தெரிவானது.
இறுதிப் போட்டி நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் பெனால்டி உதை மூலம் 3 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சமபலத்துடன் விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் இரண்டு அணிகளும் கோல் போடும் வாய்ப்புக்களை இழந்தனர். இதனால் பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதில் கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயம் மற்றும் இரண்டாமிடத்தைப் பெற்ற மண்டுர் சக்தி மகாவித்தியாலயம் என்பன அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா பாடசாலையும் கிண்ணியா மத்திய கல்லூரியும் பங்கு கொண்டது.
மிக விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் போட்டியின் இறுதி நிமிடத்தில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி கோல் ஒன்றை அடித்தது. இதனால்1 – 0 என்ற கோல்கள் கணக்கில் கிண்ணியா மத்தியகல்லூரி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.
இதற்கு முதல் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி அணியும், கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய அணியும் மோதியது. போட்டி நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்றிருந்ததால் பெனால்டி வழங்கப்பட்டது.
இதில் கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய அணி பெனால்டி உதை மூலம் 4 -3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை அணியும், மண்டுர் சக்தி மகாவித்தியாலய அணியும் மோதியது.
இதில் மண்டுர் சக்தி மகாவித்தியாலய அணி 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
இறுதிப் போட்டியில் அதிதிகளாக கலந்து கொண்ட கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, கல்முனை வலய உடற் கல்வி உதவிப்பணிப்பாளர் ஏ.எச். சத்தார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
கல்முனை வலய உடற் கல்வி உதவிப்பணிப்பாளர் ஏ.எச். சத்தார் மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம் இப்றாஹீம், உடற்கல்வி ஆசிரியர் எ.எம். றிலாஸ் ஆகியோர் இச்சுற்றுப் போட்டிகளில் இணைப்பாளர்களாக இருந்து மிகச்சிறப்பாக நடத்தி முடித்தனர்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகள் தமது திறமைகளை வெளிக்காட்டிய அதேநேரம் அம்பாரை மாவட்ட பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொக்கட்டிச்சோலை பாடசாலை மாணர்கள் 16 வயதுப் பிரிவில் கிழக்கு மாகாண பாடசாலைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.