இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியோடு, கிழக்கு மாகாண கிரிக்கெட் சபை டிவிஷன் – II உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரினுடைய இரண்டாவது போட்டியில் திகாமடுல்ல விளையாட்டுக் கழகம், மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகத்தினை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தியிருக்கின்றது.
மட்டக்களப்பு சிவானந்தா அணியினை வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ்
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) அனுமதியோடு, கிழக்கு மாகாண கிரிக்கெட் ….
கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஆறு முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கெடுக்கின்ற இந்தஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி, நேற்று (31) சந்திவெளியில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற லக்கி விளையாட்டுக் கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக தெரிவு செய்து கொண்டனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய லக்கி விளையாட்டு கழக அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 140 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. லக்கி அணியின் துடுப்பாட்டத்தில் S. விஜிதரன் 29 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார்.
அதேநேரம், திகாமடுல்ல அணியின் பந்துவீச்சு சார்பில் K. தேனுசாந்த் மற்றும் சத்துர பீரிஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
லக்கி விளையாட்டு கழக அணியின் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 141 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய திகாமடுல்ல அணி 27.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறு குறித்த வெற்றி இலக்கினை 145 ஓட்டங்களை அடைந்தது.
திகாமடுல்ல அணியின் வெற்றிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்த மகேஷ் குமார 9 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களுடன் உதவியிருந்தார்.
இதேநேரம் லக்கி விளையாட்டு கழக அணியின் பந்துவீச்சு சார்பில் சார்ளஸ், அகில ரூபன் மற்றும் மேனகாந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தம் தந்திருந்த போதிலும் அவர்களது முயற்சி வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
லக்கி விளையாட்டு கழகம் – 140 (26.1) S. விஜிதரன் 29, S. மேனகாந்த் 28, K. தேனுசாந்த் 22/4, சத்துர பீரிஸ் 42/4
திகாமடுல்ல விளையாட்டு கழகம் – 145/7 (27.1) மகேஷ் குமார 45, இஸ்மத் 25, சார்ளஸ் 20/2, அகில ரூபன் 27/2, மேனகாந்த் 29/2
முடிவு – திகாமடுல்ல விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<