கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10ஆவது விளையாட்டுப் போட்டியில் அம்பாரை கல்வி வலயம் 208 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவானது.
கிழக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டி முதல் இரண்டு நாள் முடிவுகள்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10வது விளையாட்டு விழாவின்…
203 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இறுதிநாள் பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மனோகரன் கலந்து கொண்டதுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் 15ஆம் திகதி ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டி 19ஆம் திகதி புதன்கிழமை நிறைவு பெற்றது.
கடந்த 15ஆம் திகதி கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தலைமையில் ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் றோகித்த போகொல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3000 வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கு கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 85 புள்ளிகளையும், கிண்ணியா கல்வி வலயம் 82 புள்ளிகளையும், மகாஓயா கல்வி வலயம் 57 புள்ளிகளையும், கல்குடா கல்வி வலயம் 49 புள்ளிகளையும், தெஹியத்தக்கண்டிய கல்வி வலயம் 49 புள்ளிகளையும், கந்தளாய் கல்வி வலயம் 47 புள்ளிகளையும், திருகோணமலை கல்வி வலயம் 44 புள்ளிகளையும், அக்கரைப்பற்று கல்வி வலயம் 43 புள்ளிகளையும், கல்முனை கல்வி வலயம் 42 புள்ளிகளையும், மூதூர் கல்வி வலயம் 40 புள்ளிகளையும், சம்மாந்துறை கல்வி வலயம் 21 புள்ளிகளையும், திருகோணமலை வடக்கு கல்வி வலயம் 17 புள்ளிகளையும், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் 13 புள்ளிகளையும் பெற்றுள்ள அதேவேளை திருக்கோவில் கல்வி வலயம் எவ்வித புள்ளிகளையும் பெறவில்லை.
இதில் சம்பியனாகத் தெரிவான அம்பாரை கல்வி வலயத்தில் டி.எஸ்.சேனநாயக்க மத்திய மகாவித்தியாலயம் கூடுதலான பதக்கங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இரண்டாமிடத்தைப் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்தில் களுதாவளை மகாவித்தியாலயம் கூடுதலான பதக்கங்களைப் பெற்றிருந்தது.
இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள முன்னணி பாடசாலைகள் பலவும் மிகவும் பின்னடைந்து காணப்பட்டது. குறிப்பாக கல்முனை ஸாஹிராக் கல்லூரி எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் 20 இற்கும் அதிகமான பதக்கங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் திருக்கோவில் கல்வி வலயம் எவ்வித புள்ளிகளையும் பெற்றுக் கொள்ளாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இக்கல்வி வலயத்தில் மாகாண மட்டத்தில் வெற்றி பெறக்கூடிய விளையாட்டு வீர வீராங்கனைகளை பயிற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை வலயக் கல்விப் பணிப்பாளர் மேற்கொள்ளவேண்டும்.
ஐந்து நாட்கள் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த வீரா்கள் பலரும் தெரிவு செய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
12 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் – ஏ.சி. அப்துல்லாஹ் – பொத்துவில் அல்-கலாம் மகாவித்தியாலயம் (நீளம் பாய்தல் – 4.63 மீற்றர்)
12 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் – ஜீ.ஜீ. இமாஸி அசின்சனா – கந்தளாவ வித்தியாலயம் (நீளம்பாய்தல் – 4.17 மீற்றர்)
14 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் – கில்கேந்திரன் – மண்டூர் 40 GTMS (குண்டெறிதல் – 11.08 மீற்றர்)
14 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் – பி. றக்ஸனா – களுதாவளை மகாவித்தியாலயம் (நீளம்பாய்தல் – 4.46 மீற்றர்)
16 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் – ஜே. ரிசானன் – களுதாவளை மகாவித்தியாலயம் (குண்டெறிதல்- 12.87 மீற்றர்)
16 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் – ஜீ.ஜீ.எம்.எச். நிர்மாலி – அம்பாரை டிஸ்.எஸ்.சேனநாயக்க மத்திய மகாவித்தியாலயம் (நீளம்பாய்தல் – 5.19 மீற்றர்)
18 வயதுப் பரிவு ஆண்கள் சம்பியன் – எம்.ஐ.எம். அஸ்லம் – கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயம் (நீளம்பாய்தல் – 6.61 மீற்றர்)
18 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் – ஆர். கஜேந்தி – பன்சேனை பாரி வித்தியாலயம் (நீளம்பாய்தல் – 4.94 மீற்றர்)
20 வயதுப் பிரிவு ஆண்கள் சம்பியன் – ஏ. ஆபீத் – முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி (நீளம்பாய்தல் – 6.51 மீற்றர்)
20 வயதுப் பிரிவு பெண்கள் சம்பியன் – ஏ.டி.எச். அனுரங்கி – அம்பாரை டி.எஸ்.சேனநாயக்க மத்திய மகாவித்தியாலயம் (100 மீற்றர் – 12.0 செக்கன்கள்)