டுவைன் பிராவோவுக்கு அடுத்த போட்டிகளில் ஆட முடியாத நிலை

259
Iplt20.com

டெல்லி கெபிடல்ஸ் அணியுடன் நேற்று (17) அபுதாபியில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் 37 வயதுடைய சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உபாதைக்குள்ளான நிலையில், அவருக்கு அடுத்த ஓரிரு வாரங்கள் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் நிலையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்து தற்போது இராண்டாவது பாதி லீக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் பல அணிகளிலும் ஏகப்பட்ட உபாதைகள் குவிந்துள்ளன.  

IPL தொடரில் சுனில் நரைனின் சாதனையை முறியடித்த ரபாடா

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் – ஷிரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஷிகார் தவானின் அபார சதத்தின் உதவியுடனும், இறுதி நேரத்தில் அக்ஷர் படேலின் அதிரடியுடனும் டெல்லி கெபிடல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. 

இப்போட்டியின் டெல்லி கெபிடல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இறுதி ஓவரை வீசுவதற்காக சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா அழைக்கப்பட்டார். இவ்வேளையில் முதலில் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய டுவைன் பிராவோவுக்கு இன்னும் ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் ஏன் அணித்தலைவர் எம்.எஸ் டோனி ஜடேஜாவுக்கு ஓவர் வீச வழங்கினார் என்ற கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கான விடை போட்டி நிறைவுற்றதும் கிடைக்கப்பெற்றது. 

போட்டியின் போது, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த டுவைன் பிராவோவுக்கு இடுப்பு பகுதியில் உபாதை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்தும் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஜடேஜா இறுதி ஓவரை வீசினார். 

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய ரசல், சிம்மண்ஸ், லூவிஸ்

இந்நிலையில் குறித்த உபாதை காரணமாக டுவைன் பிராவோ ஓரிரு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்தது 2 போட்டிகளிலாவது அவர் விளையாட மாட்டார். இதேவேளை பிராவோவின் உபாதை காரணமாக இதுவரையில் எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் தாஹிருக்கு அடுத்த போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இம்ரான் தாஹிர் அல்லது மிட்செல் சென்ட்னர் ஆகியோரில் ஒருவர் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களது அடுத்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<