சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு திடீர் ஓய்வை அறிவித்த பிராவோ

570

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆடாமல் இருந்து அணியின் வெற்றிக்கு பங்களித்த மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக …

35 வயதான பிராவோ, 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜோர்ஜ் டவுணில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் அவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான மார்கஸ் டிரஸ்கொதிக் மற்றும் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் ஆகியோரது விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அதன் பிரதிபலானாக குறித்த தொடர் நிறைவுக்கு வந்து 3 மாதங்ளுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் டெஸ்ட் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார்.

அன்று முதல் அவர் 40 டெஸ்ட், 164 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 66 சர்வதேச டி-20 என 270 சர்வதேசப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடித் துடுப்பாட்டம் மட்டுமல்லாது, சிறப்பாக பந்து வீசுவதிலும் வல்லவரான பிராவோ, .பி.எல் உள்ளிட்ட உலகின் முன்னணி டி-20 லீக் போட்டித் தொடர்களில் பங்குபற்றி தனது அசாத்திய திறமையால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியொரு இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகளுக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முக்கிய வீரர்களில் ஒருவராகவும், மேற்கிந்திய ஒருநாள் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ள பிராவோ, தொடர் உபாதைகள் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் அந்த அணிக்காக களம் இறங்காமல் இருந்தார்.

விறுவிறுப்பான ஆட்டத்தை பௌண்டரி மூலம் சமப்படுத்திய மேற்கிந்திய தீவுகள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …

இந்த நிலையில், தனது ஓய்வின் முடிவை இன்று (25) அறிவித்திருந்த பிராவோ, அதுதொடர்பில் விசேட அறிக்கையொன்றையும் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

நான் அனைத்துவகை சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்துள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்புகின்றேன். 14 வருடங்களுக்கு முன்னர் நான் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எனது முதல் போட்டியில் விளையாடிய தருணத்தை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக, 2004ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொப்பியினை பெற்றுக்கொண்ட தருணம் எனக்கு நினைவில் உள்ளது. அந்த நேரம் என்னிடம் காணப்பட்ட ஆர்வம், உத்வேகம் ஆகியவற்றை இன்றுவரை நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் தக்கவைத்துக் கொண்டேன்.

அத்துடன், எனது முன்னைய தலைமுறையினரின் வழியில் நானும் இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதற்காக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தாக அந்த அறிக்கையில் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், உலகம் முழுவதும் நடைபெறும் டி-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…