புதிய சாதனை படைத்த டுவைன் பிராவோ

280

T20 போட்டிகள் அடங்கலாக குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லை எட்டிய முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையினை, மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த சகலதுறைவீரரான டுவைன் பிராவோ பெற்றிருக்கின்றார்.

சுபர் கிங்ஸ் அணியில் இணையும் தீக்ஷன! ; தலைவராகும் டு பிளெசிஸ்!

இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற “த ஹன்ட்ரட்” தொடரில் நோதர்ன் சுபர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிராவோ, ஓவல் இன்விசிபிள்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற குழுநிலைப் போட்டி ஒன்றிலேயே 600 விக்கெட்டுக்கள் என்கிற சாதனை மைல்கல்லை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிக்கு முன்னர் 600 விக்கெட்டுக்கள் என்கிற இலக்கை அடைய பிராவோவிற்கு இரண்டு விக்கெட்டுக்கள் மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ரில்லி ரூசோ மற்றும் சேம் கர்ரன் ஆகிய வீரர்களின் விக்கெட்டுக்களை கைப்பற்றியே பிராவோ புதிய வரலாறு படைத்திருக்கின்றார். இதில் பிராவோவின் 600ஆவது விக்கெட்டாக இங்கிலாந்து வீரர் சேம் கர்ரன் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் T20 போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராக சாதனை படைத்திருந்த டுவைன் பிராவோவின், 500 விக்கெட்டுக்கள் என்கிற மைல்கல்லினையும் உலகில் இதுவரை எந்த பந்துவீச்சாளர்களும் எட்டவில்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

டுவைன் பிராவோவிற்கு அடுத்ததாக T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் காணப்படுகின்றார். ஆனால் ரஷீட் கான் இதுவரை T20 போட்டிகளில் 466 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பு T20 தொடரின் சம்பியனாக குசல் மெண்டிஸின் ரெட்ஸ் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மொத்தமாக 91 சர்வதேச T20 போட்டிகளில் ஆடி 78 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியிருக்கும் டுவைன் பிராவோ எஞ்சிய T20 விக்கெட்டுக்களை (522) உலகம் பூராகவும் இடம்பெறுகின்ற உள்ளூர் T20 லீக்குகள் மூலம் கைப்பற்றியிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் பிராவோ, அவ்வணிக்காக T20 போட்டிகளில் இதுவரை 154 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, அதுவே அவர் அணியொன்றுக்காக T20 போட்டிகளில் கைப்பற்றிய அதிக விக்கெட்டுக்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<