மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த 13வது பருவகால கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரின் சம்பியனாக சென். லூசியா கிங்ஸ் அணி முடிசூடியுள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சென். லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
>>இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு<<
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். லூசியா கிங்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேஷன் வொரியர்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கயானா அமேஷன் வொரியர்ஸ் அணிக்காக கடைசி நேரத்தில் வேகமாக துடுப்பெடுத்தாடி டுவைன் பிரிட்டோரியர்ஸ் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஷேய் ஹோப் 22 ஓட்டங்களை பெற்றார். இவர்களை தவிர்த்து ஏனைய வீரர்கள் போதிய ஓட்டங்களை குவிக்க தவற கயானா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நூர் அஹ்மட் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். லூசியா கிங்ஸ் அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை காட்டியது. எனினும் ரொஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தை கட்டியெழுப்பினர்.
>>தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய சம்ஷி<<
இவர்கள் இருவரும் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆரோன் ஜோன்ஸ் 31 பந்துகளுக்கு 48 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 22 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
எனவே இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென். லூசியா கிங்ஸ் அணி முதன்முறையாக CPL சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<