மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) சென் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்கு முகங்கொடுத்தார்.
>>சந்திமால், மெதிவ்ஸ் ஆட்டங்களோடு முதல் நாளில் இலங்கை முன்னிலை<<
இந்த நிலையில் தன்னுடைய உபாதைகளை கருத்திற்கொண்டு அனைத்துவகை போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
T20 கிரிக்கெட் வரலாற்றில் 582 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 631 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 7000 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேநேரம் சர்வதேசத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு சர்வதேச தொடர்களில் விளையாடி அதிக சம்பியன் கிண்ணங்களையும் இவர் வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு IPL தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்த இவர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு ஏனைய நாடுகளில் நடைபெற்றுவரும் தொடர்களில் விளையாடி வந்தார்.
தற்போது அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ள இவர், IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவியிலிருந்த கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியில் டுவைன் பிராவோ இணையவுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<