இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர இந்த வார இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் சபையின் யூத் லீக் தொடரில் பல தமிழ் பேசும் வீரர்கள்
துஷ்மன்த சமீர கடந்த வாரம் நிறைவுக்கு வந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பி–லவ் கண்டி அணிக்காக ஆடியிருந்தததோடு குறித்த தொடரில் தோற்பட்டை உபாதைக்கும் ஆளாகியிருந்தார். துஷ்மன்த சமீர குறித்த உபாதைக்காக ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு ஆசியக் கிண்ணத் தொடரில் முழுமையாக ஆட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.
31 வயது நிரம்பிய துஷ்மன்த சமீர LPL தொடர் நடைபெற முன்னர் கணுக்கால் உபாதையில் இருந்து குணமடைந்திருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் உபாதையொன்றின் காரணமாக வெளியேறியிருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.
எனினும் துஷ்மன்த சமீர இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பூரண உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் LPL இறுதிப் போட்டியில் தசை உபாதைக்குள்ளான வனிந்து ஹஸரங்க ஆசியக் கிண்ணத் தொடரில் பூரண உடற்தகுதியுடன் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.
அத்தோடு ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இம்முறைக்கான இலங்கை குழாத்தில் 15 வீரர்களும், 5 மேலதிக வீரர்களும் உள்ளடக்கப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
செய்தி மூலம் – Daily Mirror
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<