RCB அணியை வேகத்தால் மிரட்டிய துஷ்மந்த சமீர

Indian Premier League 2022

250
Dushmantha Chameera

IPL தொடரில் நேற்று நடைபெற்ற (19) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில், முதலாவது பந்து ஓவரை வீசுவதற்கு துஷ்மந்த சமீர அழைக்கப்பட்டார்.

>> கவீஷா டில்ஹாரியின் சகலதுறை பிரகாசிப்புடன் விமானப்படை A அணிக்கு வெற்றி

முதலாவது பந்து ஓவரை சிறப்பாக வீசிய சமீர தன்னுடைய முதல் 4 பந்துகளுக்கும் 7 ஓட்டங்களை வழங்கியிருந்தார். இதன்பின்னர் 5வது பந்தில் பெங்களூர் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான அனுஜ் ராவட்டின் விக்கெட்டினை வீழ்த்தி லக்னோவ் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தார்.

தொடர்ச்சியாக தன்னுடைய முதல் ஓவரின் இறுதி பந்தில் பெங்களூர் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியை முதல் பந்திலேயே வீழ்த்தி வெளியேற்றினார். இதன்மூலம் முதல் ஓவரில் 7 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவ் அணிக்கு பலமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

குறிப்பாக IPL வரலாற்றில் விராட் கோஹ்லியை முதல் பந்தில் ஆட்டமிழக்கச்செய்த நான்காவது வீரர் என்ற பெருமையை சமீர பெற்றக்கொண்டார். அசிஷ் நெஹ்ரா 2008ம் ஆண்டு முதல் பந்தில் கோஹ்லியை வீழ்த்தியிருந்த நிலையில், 2014ம் ஆண்டு சந்தீப் சர்மா மற்றும் 2017ம் ஆண்டு நெதன் குல்டர்-நெயில் ஆகியோர் வீழ்த்தியிருந்தனர். தற்போது 5 வருடங்களுக்கு பின்னர் விராட் கோஹ்லி தன்னுடைய முதல் பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.

இதன் பின்னர் 3வது ஓவரை வீசிய சமீரவுக்கு எதிராக கிளேன் மெக்ஸ்வேல் வேகமாக ஓட்டங்களை குவித்த நிலையில், மொத்தமாக 3 ஓவர்களை வீசிய சமீர 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியை பொருத்தவரை பெங்களூர் அணி சார்பாக பெப் டு பிளெசிஸ் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்று, 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதேவேளை இந்த வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், லக்னோவ் அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<