இரண்டாவது டெஸ்டிலிருந்து வெளியேறும் நியூசிலாந்து வீரர்

1187
Dushmantha Chameera and Neil Wegner injured

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான நெயில் வெக்னர், இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் அவ்வணிக் குழாத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> மெதிவ்ஸின் சதத்தோடு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை

நெயில் வெக்னருக்கு இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது காலில் உபாதை ஏற்பட்டது அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த உபாதையினை அடுத்து அவர் மைதானத்தினை விட்டு வெளியேறியதோடு மீண்டும் பந்துவீசவும் வந்திருக்கவில்லை.

இவ்வாறான ஒரு நிலையிலையே அவர் மார்ச் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நெயில் வெக்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறிய போதும், தற்போது நடைபெற்று வருகின்ற முதல் டெஸ்ட் போட்டியில் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் துடுப்பாட அழைக்கப்படுவார் என நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டேட் குறிப்பிட்டுள்ளார்.

கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடைபெறும் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில், நியூசிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி இலக்கிற்கு இன்னும் 257 ஓட்டங்கள் தேவைப்பட 9 விக்கெட்டுக்கள் மீதமாக இருக்கின்றது.

நெயில் வெக்னர் தனது உபாதையில் இருந்து பூரணமாக குணமடைய இன்னும் ஆறு வாரங்கள் வரை செல்லும் என அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இருந்து விலகி இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

துஷ்மன்த சமீரவிற்கு முழங்காலில் ஏற்பட்ட தொடர்ச்சியான வலியே அவர் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் இருந்து விலகுவதற்குரிய காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

துஷ்மன்த சமீரவிற்கு பிரதியீடாக பிரமோத் மதுசான் மற்றும் மதீஷ பதிரன ஆகிய இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான இரண்டு அணிகளிலும் தக்க வைக்கப்படுவர் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் டெஸ்ட் தொடரின் பின்னர் ஆரம்பமாகவுள்ளதோடு, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஒக்லாண்ட் நகரில் நடைபெறுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<