இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இரண்டாவது நாளான இன்று (13) இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவை, லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி வாங்கியதுடன், மஹீஷ் தீக்ஷனவை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்த ஏலத்தில், இதுவரையில் மூன்று இலங்கை வீரர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், வனிந்து ஹஸரங்கவை நேற்றைய தினம் 10.75 கோடிக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியிருந்தது.
>>பினுர பெர்னாண்டோவினை இழக்கும் இலங்கை அணி
இந்தநிலையில், வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவுக்கான போட்டியில், லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இணைந்திருந்தன. இதில், இந்திய ரூபாயில் 50 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட, துஷ்மந்த சமீரவை லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணி 2 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
இதனைத்தொடர்ந்து இலங்கை அணிசார்பாக ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 70 லட்சம் ரூபாவுக்கு வாங்கியது. மஹீஷ் தீக்ஷனவை வாங்குவதற்கான முயற்சியை கொல்கத்தா அணி மேற்கொண்டாலும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதியாக இவரை தக்கவைத்தது.
வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தாலும், மஹீஷ் தீக்ஷன முதன்முறையாக ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<