இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது.
இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நேற்று (14) அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த குழாத்திற்குள் குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கப்படாமல் போனது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
பிஞ்ச், வோர்னரின் சதங்களின் உதவியுடன் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வோர்னர்…….
கடந்த ஆண்டு (2019) இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்த தருணத்தில் தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்று கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
குறித்த போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக அறியப்பட்ட குசல் ஜனித் பெரேரா இந்த தசாப்தம் கண்ட மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினார். வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா ஆகியோரை திணறச் செய்த குசல் ஜனித் பெரேரா 153 ஓட்டங்கள் பெற்றதோடு, இக்கட்டான நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியினையும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற பங்களிப்புச் செய்திருந்தார்.
இவ்வாறாக மிகச் சிறப்பான துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா, அதுவும் கடந்த 11 மாதங்களில் வெறும் 5 டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா இலங்கை டெஸ்ட் அணியில் இருந்து மோசமான துடுப்பாட்டத்திற்காக நீக்கப்பட்டிருப்பதே, இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் இடையில் இந்த விடயம் பேசுபொருளாக மாற காரணமாக இருக்கின்றது.
குசல் பெரேரா நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
”குசல் பெரேராவிற்கு 150 ஓட்டங்கள் பெற முடியும். ஆனால், எங்களுக்கு மைதானத்தில் நீண்ட நேரம் நின்று துடுப்பாடும் ஒருவரே தேவை. இதனால், நாங்கள் திரிமான்னவை தெரிவு செய்திருக்கின்றோம்.”
கிட்டத்தட்ட 68 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் வரையில் விளையாடி 22.64 என்கிற துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவை, அவரைவிட கூடுதலான டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியினைக் (31.12) கொண்டிருக்கும் குசல் பெரேராவிற்கு பதிலாக இலங்கை டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கியிருப்பதும் இந்த விடயம் சூடு பிடிக்க மற்றொரு காரணியாக உள்ளது.
மூவகை தொடரிலும் விளையாட பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் அணி
மிக நீண்டகால காத்திருப்பின் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட்……
அதேநேரம், குசல் பெரேரா இலங்கை டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்படாது போயிருக்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவும் தனது ட்விட்டர் கணக்கில் விமர்சித்ததோடு, குசல் பெரேராவிற்கு இன்னும் போதிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
Wasn’t he the same player who won the test match in Durban single handedly 12 months ago? He has only played 3 test matches (5 Innings) since then.. ??♂️ https://t.co/gyvMrcEu21
— Mahela Jayawardena (@MahelaJay) 14 January 2020
இதேநேரம், ஜிம்பாப்வே அவ்வளவு சவால் நிறைந்த டெஸ்ட் அணி இல்லை என்பதனால் அவர்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் சங்கீத் கூரே போன்ற இளம் வீரர்களுக்கு திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த விடயமும் ஜிம்பாப்வேயிற்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.
விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை இம்மாதம் 19ஆம் திகதி ஹராரேவில் இடம்பெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியும் ஹராரே நகரில் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<