அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கோபா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்து தொடரில் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போட்டியான கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பலம் வாய்ந்த பிரேசில் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் பிரேசில் அணி 0–1 என்ற கோல் கணக்கில் பேருவிடம் அதிர்ச்சி தோல்விகண்டது.
முதல் தோல்வியை சந்தித்த பிரேசில் அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 3ஆவது இடம் பெற்று கால் இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஏற்கனவே பிரேசில் அணி ஒரு வெற்றி (ஹைதிக்கு எதிராக), ஒரு சமநிலை முடிவு (ஈகுவடாருடன்) பெற்றிருந்தது. இந்தப் போட்டித் தொடரில் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரேசில் அணி முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.
இது அந்த நாட்டு ரசிகர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்கா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரேசில் கால்பந்து சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்