டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய நாடுகளுக்கான தகுதிகாண் போட்டியாக நேற்று (14) நிறைவுக்கு வந்த டுபாய் க்ராண்ட் ப்ரிக்ஸ் 2021 – பாஷா இன்டர்நெசனல் பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை வீரர்கள் மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற காமினி ஏக்கநாயக்க, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தார்.
டுபாய் க்ராண்ட் ப்ரிக்ஸ் 2021 – பாஷா இன்டர்நெசனல் பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கை சார்பாக ஆறு வீர வீராங்களைகள் பங்கேற்றிருந்தனர்.
>> பாஷா க்ராண்ட் ப்ரிக்ஸில் 6 இலங்கை வீரர்கள்!
போட்டிகளில் முதல்நாளான கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான T56/46/47 நீளம் பாய்தலில் பங்குகொண்ட குமது ப்ரியங்கா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியில் அவர் 4.89 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்.
அவருடன் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கை வீராங்கனையான அமரா இந்துமதி, 4.76 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எதுஎவ்வாறாயினும், நேற்றுமுன்தினம் (13) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அமரா இந்துமதி, போட்டியை ஒரு நிமிடம் 05.63 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மறுபுறத்தில் பெண்களுக்கான F/46/47 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட குமது ப்ரியங்கா, 13.30 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது தனிப்பட்ட அதிசிறந்த காலத்துடன் நான்காவது இடத்தைப் பெற்று ஆறதல் அடைந்தார்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான F/46 ஈட்டி எறிதலில் பங்குகொண்ட காமினி ஏக்கநாயக்க, 58.55 மீற்றர் தூரத்தை எறிந்த வெள்ளிப் பதக்கத்தை வென்று டோக்கியோ பரா ஒலிம்பிக்கு தேர்வாகினார்.
அத்துடன், ஆண்களுக்கான F/38/42/63/64 ஈட்டி எறிதலில் பங்குகொண்ட சம்பத் ஹெட்டியாரச்சி, 56.34 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
>> Photos: Sri Lanka Para Athletics Team
இதுஇவ்வாறிருக்க, ஆண்களுக்கான F/42/63 குண்டு போடுதலில் முதல்தடவையாகக் களமிறங்கிய பாலித் பண்டார வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 13.42 மீற்றர் தூரத்தை எறிந்து இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.
எதுஎவ்வாறாயினும், பரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான தினேஷ் ப்ரியந்த, ஈட்டி எறிதல் போட்டியிலும், சம்பத் பண்டார வில் வித்தை போட்டியிலும் 2021ம் ஆண்டு பரா ஓலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<