றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், தென் ஆபிரிக்க அணியைச் சேர்ந்த பெப் டுப்லசிஸ் கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்தியாவில் நடைபெறும் 9ஆவது ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தச் செய்தியை டுப்லசிஸ் தனது உத்தியோகபூர்வ டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தி
“எனது ஐ.பி.எல் போட்டித் தொடர் துரதிருஷ்டவசமாக கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக முடிவுக்கு வருகிறது. 6 வாரங்களுக்கு விளயாட முடியாது.நன்றி இந்தியா மற்றும் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ்.”
இவ்வருட ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ள வீரர்களில் அஜின்கியா ரஹானிக்கு அடுத்து டுப்லசிஸ் காணப்படுகிறார். அவர் 6 போட்டிகளில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 206 ஓட்டங்களை தற்போது வரை பெற்றுள்ள நிலையில் தான் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே காலின் பின் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் மற்றுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரரான இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் பீட்டர்சனும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டுப்லசிஸ் தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் படி அவர் மீண்டும் குணமடைய 6 வாரங்கள் எடுக்குமாயின் ஜூன் மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய முத்தரப்பு தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமான ஒரு விடயமாகும்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்