இலங்கையின் முதற்தர காலணி உற்பத்தி நிறுவனமான DSI நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இடம்பெறும் 21வது சுபர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
கல்வி அமைச்சின் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து இந்த 21வது சுபர்ஸ்போர்ட் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரை DSI நிறுவனம் நடத்தவுள்ளது.
தேசிய கபடி சம்பியன்ஷிப்பில் நிந்தவூர் மதீனா அணி இரண்டாம் இடம்
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து 1999ஆம் ஆண்டு DSI நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பியன்ஷிப் தொடரின் நோக்கம் கிராமிய மற்றும் நகர்ப்புற கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஒரு வாய்ப்பையும் தேவையான ஆதரவையும் வழங்குவதுடன் அவர்களுக்கு தேசிய தரத்தின் ஒரு தளத்தையும் வழங்குவதாகும்.
குறித்த இந்த தொடரில் ஆரம்பத்தில் 198 பாடசாலை அணிகள் போட்டியிட்டிருந்ததுடன், இந்த தொடரின் மூலம் சுமார் 400 இற்கும் மேற்பட்ட கரப்பந்தாட்ட வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், இம்முறை தொடரின் ஏற்பாட்டுக்குழு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5000 இற்கும் அதிகமான அணிகள் பங்கேற்கும் என எதிர்பார்த்துள்ளது.
இம்முறை போட்டித்தொடரானது மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய ரீதியாக என பல கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. இதில் மாவட்ட மட்ட போட்டிகள் மே மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் ஆரம்பமாகி ஜூன் 20ம் திகதிக்குள் நிறைவடையும். இதில் மாவட்ட ரீதியில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மகாண ரீதியான சுற்றுக்கு தகுதிபெறும்.
மாகாண ரீதியான போட்டிகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆகஸ்ட் 13ம் திகதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இந்த மாகாண சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தேசிய ரீதியில் போட்டியிடவுள்ளன.
தேசிய ரீதியான போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி தொடக்கம் 31ம் திகதிவரையும், செப்டம்பர் முதலாம் திகதி முதல் 3ம் திகதிவரையும் நடைபெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து இறுதிப் போட்டிகள் அனைத்தையும் செப்டம்பர் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தொடரை பொருத்தவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கென 11 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் என்ற வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, இந்த போட்டித்தொடர் குறித்து கருத்து வெளியிட்ட DSI நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துசித ராஜபக்ஷ, “DSI சுபர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்தாட்ட தொடர் 21வது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த வருடாந்த தொடருக்கு DSI அனுசரணை வழங்குவது மகிழ்ச்சிளையும், பாக்கியத்தையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட இந்த தொடரானது நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் திறமையான வீர, வீராங்கனைகளுக்கு மிக முக்கியமான தளமாக விளங்கி வருகின்றது. அதுமாத்திரமின்றி நாட்டின் தேசிய விளையாட்டினை அபிவிருத்தி செய்வதிலும், பிரபல்யப்படுத்துவதிலும் சுபர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டார்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<