கொழும்பு P.சாரா ஓவல் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள DS மற்றும் மஹாநாம கல்லூரிகளுக்கிடையிலான 11ஆவது பெரும் சமர் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன் போது இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி, கொழும்பு R. பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் தடவையாக பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், DS சேனநாயக்க கல்லூரியின் 50ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் இப்போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் DS சேனநாயக்க கல்லூரி மேற்கொண்டுள்ளது.
DS மற்றும் மஹாநாம கல்லூரிகளுக்கிடையிலான போட்டித் தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இடது கை வேகபந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவின் தலைமையில், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் DS சேனநாயக்க கல்லூரி வெற்றியீட்டிய அதேநேரம் ஏனைய அனைத்து போட்டிகளும் சமநிலையில் முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்விரு அணிகளும், அரவிந்த டி சில்வா கிண்ணத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. அவற்றில் 5 போட்டிகளில் மஹாநாம கல்லூரி வெற்றியீட்டி முன்னிலையிலும் DS சேனநாயக்க கல்லூரி நான்கு போட்டிகளிலும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையிலும் முடிவுற்றுள்ளன. கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டியில் மஹாநாம கல்லூரி 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மஹாநாம கிரிக்கெட் அணி விக்கெட் காப்பாளர் மலிந்து மதுரங்க தலைமையில் களமிறங்கவுள்ளது. இதுவரை அணிக்காக விளையாடி 950 ஓட்டங்களை குவித்துள்ள அவர் விக்கெட் காப்பாளராகவும் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பெரும் சமர் மற்றும் மட்டுப்படுத்தபட்ட ஓவர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்த உறுதியோடு இருப்பதாக அணித் தலைவர் மதுரங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
”கிரிக்கெட் விளையாட்டின் குணநலன்கள் பேணப்படவேண்டும். அத்துடன் இரண்டு பாடசாலைகளினதும் சகோதரத்துவம் பாதுக்காக்கப்படவேண்டும். அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் அதேநேரம் வெற்றியீட்ட உள்ள சிறந்த அணிக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்” என்று மஹாநாம கல்லூரி அதிபர் LMD தர்மசேன தெரிவித்தார்.
DS சேனநாயக்க கல்லூரி கிரிக்கெட் அணியை இடதுகை அதிரடி துடுப்பாட்ட வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டொரின் பிடிகல வழிநடத்தவுள்ளார். இவ்வருட பருவகாலத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் இவர் உபாதை காரணமாக விளையாடி இருக்கவில்லை, எனினும் மஹாநாம கல்லூரியுடனான போட்டியில் விளையாடி தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷெசாட் அமீன் அணியின் உபதலைவராக கடமையாற்றுவார்.
”இம்முறை மட்டுப்படுத்தபட்ட ஓவர் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதால், வழமைக்கு மாறாக அதிகளவான பார்வையாளர்களை எதிர்பார்கின்றோம். அத்துடன் இவ்வருடம் பிரமாண்டமான முறையில் போட்டியை ஒழுங்கு செய்வதையொட்டி மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” என DS சேனநாயக்க கல்லூரி அதிபர் RMM ரத்னாயக்க நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
60 ஆண்டு கால வரலாற்றை கொண்டுள்ள மஹாநாம கல்லூரி, தனுஷ்க்க குணதிலக்க மற்றும் லலிதமான பெர்னாண்டோ போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியுள்ளது. அத்துடன் அவர்கள் மேலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை எதிர்காலத்தில் உருவாக்க பின்னின்று உதவி செய்கின்றனர்.
அதேநேரம், DS சேனநாயக்க கல்லூரி, அதிரடி துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் முன்னாள் இலங்கை அணித் தலைவரான ஹஷான் திலக்கரத்ன போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கியுள்ளது. அத்துடன், டி20 நிபுணத்துவம் வாய்ந்த இசுறு உதான மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோரும் DS சேனநாயக்க கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
DS சேனநாயக்க கல்லூரி சார்பாக சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ள இடதுகை சுழல் பந்து வீச்சாளர் முதித்த லக்ஷான் இதுவரை 68 விக்கெட்டுகளையும் அவருடன் அணியின் பந்து வீச்சை மேலும் வலுப்படுத்தவுள்ள மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் விஹான் குணசேகற 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DS சேனநாயக்க அணித் தலைவர் டொரின் பிடிகல மற்றும் மஹாநாம அணித் தலைவர் மலிந்து மதுரங்க இருவரும் இம்முறை கிண்ணத்தை கைப்பற்றி தத்தமது கல்லூரிக்கு கொண்டு செல்ல ஆர்வமாக உள்ளனர்.