அஸ்ரானின் ஹெட்ரிக் கோலால் ஒடிடாஸை இலகுவாக வீழ்தியது த்ரீ ஸ்டார்

260

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்தும்ட்ரகன்ஸ் லீக் -2017′ கால்பந்து தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் அஸ்ரானின் அசத்தலான ஹெட்ரிக் கோலின் உதவியோடு இளம் ஒடிடாஸ் விளையாட்டுக் கழகத்தினை 6 – 1 என்ற கோல்கள் கணக்கில் வென்ற த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் இத்தொடரில் தமது சிறந்த வெற்றியினை பதிவு செய்தது.

பைக்கரின் அபார ஆட்டத்தால் ட்ரிபல் செவன் கழகத்தை வீழ்த்திய நியூ ஸ்டார்

விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும்…

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2ஆவது நிமிடத்திலே அம்லத் கொடுத்த சிறப்பான பந்தினை த்ரீ ஸ்டார் அணித் தலைவர் அஸ்ரான் பெற்று கம்பத்தின் வலப்புறமாக உள்ளனுப்ப, ஆரம்பத்திலே கோல் கணக்கினை ஆரம்பித்து முன்னிலை பெற்றது அவ்வணி.

மேலும், 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஒடிடாசின் முதல் முயற்சியாக சஹாட் கொடுத்த பந்தினை ஸபான் பெற்று கம்பம் நோக்கி உதைக்க நேராக வந்த பந்தினை த்ரீ ஸ்டார் கோல் காப்பாளர் றிகாஸ் நேர்த்தியாகப் பிடித்துக் கொள்ள முதல் முயற்சி ஏமாற்றமளித்தது.

மீண்டும் 18ஆவது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் வீரர் அப்ரீன் வழங்கிய பந்தினை அஸ்ரான் பெற்று பெனால்டி பகுதிக்குள் கொண்டு செல்கையில் ஒடிடாசின் தடுப்பு வீரர்களின் சிறந்த முயற்சியால் பந்து வெளியேற்றப்பட த்ரீ ஸ்டாரின் முயற்சி பலனளிக்காமல் போனது.  

அடுத்த இரு நிமிடங்கள் கடத்த நிலையில் அப்ரீன் கொடுத்த கோலுக்கான பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற நப்ராஸ் கோல் காப்பாளர் மஹ்தியின் கைகளுக்கே அடிக்க, அவர் நேராக வந்த பந்தை தவறவிட்டார். பந்து மஹ்தியின் கால்களுக்கு நடுவாக உருண்டு கோலுக்குள் சென்றமையினால் த்ரீ ஸ்டாரின் கோல் கணக்கு இரட்டிப்பானது.

இரண்டாவது கோல் அதிர்ச்சி தெளிவதற்குள் 22ஆவது நிமிடத்தில் இம்ரான் கொடுத்த பந்தினை அஸ்ரான் பெற்று வலக் காலால் கம்பம் நோக்கி அடிக்க மஹ்தியின் கவனயீனத்தால் பந்து மீண்டும் கம்பத்திற்குள் நுழைய அஸ்ரானின் கோல் எண்ணிக்கை இரட்டிப்பாகியதுடன் அணி 3 கோல்களினால் முன்னிலை பெற்றது.

2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா?

பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம்…

அடுத்த நிமிடத்தில் ஒடிடாஸ் கழகத்தின் கோல் காப்பாளர் மஹ்தி வெளியில் எடுக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மாற்று கோல் காப்பாளர் அமீஸ் உள்ளனுப்பப்பட்டார்.  

மேலும், பத்து நிமிடங்கள் கடந்த நிலையில் ஸஹாட் கொடுத்த பந்தை அஸ்கான் பெற்று வேகமாக கம்பம் நோக்கி அனுப்ப அதை றிகாஸ் தன் கையால் குத்தி மைதானத்தை விட்டு வெளியேற்ற ஒடிடாசின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக நிப்ராஸ் பந்தை இம்ரானுக்கு அனுப்ப, அவர் அதை நேர்த்தியாக கம்பம் நோக்கி உயர்த்தி அடித்தார். இதன்போது பந்து கம்பத்திற்கு மிக அருகால் வெளியேறியது.  

முதல் பாதி: த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3  –  0  ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்த 8ஆவது நிமிடத்தில் பஸ்மிர் மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து கொண்டு வந்த பந்தினை அஸ்ரானிடம் கொடுக்க அதை அஸ்ரான் இலகுவாக கம்பத்தின் இடப்பக்கத்தால் உள்ளனுப்ப எந்தவித தடையுமின்றி பந்து கம்பத்திற்குள் சரணடைந்தது. இதனால் அஸ்ரான் தனது ஹெட்ரிக் கோலினைப் பதிவு செய்து அணியின் கோல் எண்ணிக்கையை நான்காக்கினார்.

த்ரீ ஸ்டார் முன்கள வீரர்கள் ஒடிடாசின் பகுதியினை முழுமையாக ஆக்கிரமித்து ஆடிக்கொண்டிருக்க, ஒடிடாசின் முன்கள வீரர்களும் தமதுs தடுப்பு பகுதியில் காணப்பட்டனர்.

மீண்டும் 63வது நிமிடத்தில் இம்தாத் பந்தினை அஸ்ரானிடம் கொடுக்க அஸ்ரான் இரண்டு தடுப்பு வீரர்களைத் தாண்டி கம்பம் நோக்கி அடித்தார். பந்து கம்பத்தின் இடப்பக்கத்தில் பட்டு அப்தாலின் கால்களில் சேர, அமீஸ் இல்லாத பகுதியினூடாக அவர் பந்தை கம்பத்தினுள் உள்ளனுப்பினார். இதனால் ஐந்தாவது கோலையும் பெற்றது த்ரீ ஸ்டார் கழகம்.

இரண்டாம் பகுதியினை முழுமையாக தன் கட்டுப்பாட்டிட்குள் த்ரீ ஸ்டார் கொண்டுவர நிலை குலைந்து நின்றது இளம் ஒடிடாஸ் கழகம்.

ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு…

70ஆவது நிமிடத்தில் பஸ்மீருக்கு கிடைத்த பந்தினை இம்தாத்திடம் கொடுக்க, அதை இம்தாத் உயர்த்தி கம்பத்திற்கு அடித்தார். இதன்போது உயரே எழுந்து பந்தை தன் கையால் அமீஸ் குத்திவிட கோல் முயற்சி வீணானது.

தொடர்ந்து 76வது நிமிடத்தில் இரண்டாம் பாதியில் ஒடிடாசின் முதல் முயற்சியாக ஹயாம் பந்தினை கொண்டு சென்று கம்பத்திற்கு சற்று தொலைவில் வைத்து ஸபானிடம் கொடுக்க, கோல் காப்பாளர் றிகாஸ் பந்தைப் பிடிக்க சற்று முன்னோக்கி வரும் நேரத்தில் ஸபான் கம்பத்திற்குள் பந்தை அனுப்பினார். றிகாஸின் கையில் பட்டவாரே பந்து கோலினுள் நுழைய அது அவ்வணிக்கு ஆறுதல் கோலாக மாறியது.

மேலும் 7 நிமிடங்கள் கடந்த நிலையில் அத்பான் ஒடிடாஸின் பெனால்டிப் பகுதிக்குள் பந்தினை கொண்டு சென்று கம்பம் நோக்கி அடிக்க பந்து தடுப்பு வீரர் தாஸிமின் கைகளில் பட்டு வெளியேறியமையினால் நடுவர் பெனால்டி வாய்ப்பினை த்ரீ ஸ்டார் கழகத்திற்கு வழங்கினார்.

பெனால்டி உதையினை இன்ஸாப் கம்பத்தின் இடப்பக்கமாக அடிக்க அமீஸ் அதை தடுக்க எத்தனிக்க முன் பந்து உள் நுழைந்தது. இதன் காரணமாக மேலதிக 5 கோல்களினால் அவ்வணி முன்னிலை பெற்றது.

போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க இளம் வீரர்களைக் கொண்ட ஒடிடாஸ் அணியினை அஸ்ரானின் ஹெட்ரிக் கோல் உதவியோடு 6 – 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தனது இப்பருவகாலத்தின் சிறந்த வெற்றியினைப் பதிவு செய்தது த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம்.

முழு நேரம்: த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 6  – 1  ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம்

கோல் போட்டவர்கள்
த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – அஸ்ரான் 2, 22’ & 53’, நபாஸ் 20’, அப்தால் 63’, இன்ஸாப் 83’
ஓடிடாஸ் விளையாட்டுக் கழகம் – ஸபான் 76’

மஞ்சள் அட்டை
ஒடிடாஸ் விளையாட்டுக் கழகம் – ஹயாம் 33’

>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<