இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன், கிழக்கு மாகாண கிரிக்கெட் சங்கம் டிவிஷன் – II கழகங்கள் இடையே ஒழுங்கு செய்த ஒரு நாள் தொடரின் போட்டியொன்றில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகத்தினை 122 ஓட்டங்களால் அபாரமான முறையில் தோற்கடித்திருக்கின்றது.
மேலும் இந்த போட்டியில் கிடைத்த வெற்றியுடன் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணி, இந்த ஒரு நாள் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்கின்றது.
இத்தொடரில் தமது முன்னைய போட்டியில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்திருந்த ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகத்துடன் மோதிய போட்டி ஞாயிற்றுக்கிழமை (7) சந்திவெளியில் ஆரம்பமாகியது.
>>ஐ.பி.எல். வரலாற்று சாதனையை முறியடித்த அல்ஷாரி ஜோசப்
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டு கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காக தேர்வு செய்து கொண்டனர்.
இதன்படி முதலில் துடுப்பாடிய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணி 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப வீரராக வந்த முஜீப் 9 பெளண்டரிகள் உடன் 75 ஓட்டங்களை குவித்திருந்தார். அதேநேரம், பின்வரிசையில் துடுப்பாடியிருந்த றியால்டீன் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகத்தின் பந்துவீச்சு சார்பில் துஷந்த மற்றும் பெஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 242 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழக அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது.
இதனை அடுத்து தொடர்ந்தும் விக்கெட்டுக்களை இழந்த அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகம் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழக அணியின் துடுப்பாட்டத்தில் TN. துலாஜ் 28 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.
அதேநேரம், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழக அணியின் பந்துவீச்சில் இஹ்சான் ரூகைம் 4 விக்கெட்டுக்களையும், முஜீப் மற்றும் றியால்தீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 241 (49.5) – FM. முஜீப் 75, றியால்டீன் 41, துஷந்த 34/3, பெஹான் 50/3
அம்பாறை சந்ததிஸ்ஸ விளையாட்டுக் கழகம் – 119 (34.1) – TN. துலாஜ் 28, இஹ்சான் ருஹைம் 39/4, முஜீப் 15/2, றியால்தீன் 25/2
முடிவு – ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 122 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<