கிரேட் ஸ்டார் அணியை வீழ்த்திய பாடும்மீன் அணிக்கு டிவிஷன் 2 தொடரின் மூன்றாம் இடம்

1893
Singing Fish v Great Star

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கிரேட் ஸ்டார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பாடும்மீன் அணி தொடரில் மூன்றாம் இடத்தை சுவீகரித்துள்ளது.  

டிவிஷன் 2 இறுதிப் போட்டியில் மோதவுள்ள ரட்னம் விளையாட்டுக் கழகம்

ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் கிரேட் ஸ்டார் அணி, கெலிஓய கால்பந்துக் கழகத்திடம் தோல்வியடைந்திருந்த அதேவேளை, பாடும்மீன் விளையாட்டுக் கழகம், கொழும்பு ரட்னம் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் தொடரின் மூன்றாம் இடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டி கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கிரேட் ஸ்டார் அணிக்கு கோலுக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் பாடும்மீன் அணியின் கோல் காப்பாளர் பிரதீபனின் தடுப்பினால் அந்த வாய்ப்பு தடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல தொடர் வாய்ப்புக்களைப் பெற்ற பாடும்மீன் அணியினர், இறுதியில் ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் தமது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொண்டது.

இதன்போது, சிறந்த முறையில் பந்தைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்டியன் அதனைக் கொண்டு சென்று இறுதியில் கோல் காப்பாளர் இம்ரானையும் தாண்டிச் சென்று அந்த கோலைப் பெற்று முதல் பாதியின்போதே தமது அணியை முன்னிலையடையச் செய்தார்.

முதல் பாதி: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 01 – 00 கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

போட்டியின் முதல் பாதியைப் போன்றே இரண்டாவது பாதியிலும் கிரேட் ஸ்டார் அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் பாடும்மீன் அணியினர், தாம் மற்றொரு கோலைப் பெறுவதற்கான முயற்சியை விட, தடுப்புக்களை மேற்கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டினர்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கெலிஓய கால்பந்து அணி

குறிப்பாக அவ்வணியின் பின்களம் மிகவும் பலமாக இருந்தது. எனினும், கிரேட் ஸ்டார் அணியினரின் தாக்குதல் ஆட்டமானது தமக்கான முதல் கோலைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியையே ஆட்டத்தில் காண்பித்தது.

எனினும் போட்டியில் பெறப்பட்ட ஒரே கோலாக கிறிஸ்டியனின் கோல் மாத்திரமே இருந்தது. எனவே, போட்டி நிறைவில் பாடும்மீன் அணி தொடரின் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: பாடும்மீன் விளையாட்டுக் கழகம் 01 – 00 கிரேட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – பூலேந்திரன் பிரதீபன் (பாடும்மீன் விளையாட்டுக் கழகம்)