இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் இந்த பருவகாலத்திற்கான நடாத்தப்படும் பிரிவு 2 அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதியின் இரு கட்டங்களிலும் யாழ் பாடும்மீன் அணியை வீழ்த்தி ரட்னம் விளையாட்டுக் கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இத்தொடரின் அரையிறுதியின் முதல் கட்டப் போட்டி யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. அப்போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ரட்னம் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி கொழும்பு சிடி கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே இரண்டு கோல்களால் தோல்வியுற்ற பாடும்மீன் அணிக்கு இறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில் இப்போட்டியில் குறைந்தது மூன்று கோல்களையும், எதிரணிக்கு கோல்கள் எதனையும் பெற விடாமல் தடுக்க வேண்டிய ஒரு கட்டாயமும் இருந்தது.
போட்டி ஆரம்பமாகி முதல் 10 நிமிடங்களும் ரட்னம் அணியின் பலம் மிகவும் அதிகமாக இருந்தது. முழுமையாக தமது கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்த அவர்கள், குறித்த நேரத்திலே இரண்டு கோணர் வாய்ப்புக்களையும் பெற்றனர்.
எனினும் 10 நிமிடங்களின் பின்னர் பாடும்மீனின் ஆட்டம் முழுமையாக மாற்றம் பெற்றது. அவர்களது ஆட்டத்திலும் ஒரு வேகத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
திடீர் என்று ரட்னம் அணியின் பின்களத்தை நோக்கி வந்த பந்தை தடுப்பதில் கோல் காப்பாளர் ஷெஹான் மற்றும் பின்கள வீரர் ரிமாஸ் ஆகியோருக்கு இடையில் தடுமாற்றம் ஏற்பட, எதிரணி வீரர் அதனை பறிக்க முற்பட்ட இறுதி நேரத்தில் கோல் காப்பாளர் பந்தை பிடித்து அணியைக் காப்பாற்றினார்.
ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்திலும், பாடும்மீன் அணியின் கோலுக்கான சிறந்த முயற்சியொன்று இறுதி நிமிடத்தில் சிறந்த முடிவின்றி தவறவிடப்பட்டது.
சொந்த மண்ணில் பாடும்மீனை விழ்த்திய கொழும்பு ரட்னம்
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலின் மூலம் கொழும்பு ரசிகர்களை பெறும் மகிழ்ச்சியடையச் செய்தார் ரட்னம் அணியின் ஆகில். சக வீரர் சசன்க சிறந்த முறையில் வழங்கிய பந்தைப் பெற்ற ஆகில், மிகவும் லாவகமாக கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
26ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியின் முக்கள வீரர் ஒருவர் கோணர் திசையில் இருந்து கோலுக்குள் வழங்கிய பந்தை ஞானபிரதாப் தலையால் முட்டி கோலுக்கு முயற்சித்தார். எனினும் பந்து ரட்னம் அணியின் கோல் காப்பாளரின் கைக்குள்ளேயே சென்றது.
பின்னர் 32ஆவது நிமிடத்தில் ரட்னம் வீரர்கள் தமக்கு கிடைத்த கோணர் உதையின் போது, சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு இறுதியில் வேகமாக கோலை நோக்கி அடிக்க, அந்த இலக்கு சிறந்ததாக இருக்கவில்லை.
36ஆவது நிமிடம் பாடும்மீன் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதன்போது ரட்னம் அணி வீரர் ஒருவர் ஹெடர் செய்த பந்து, அதே அணியின் கோல் காப்பாளரிடம் சென்றது. எனவே துரதிஷ்டவசமாக செல்ல இருந்த ஒவ்ன் கோலில் இருந்து அவ்வணி பாதுகாப்புப் பெற்றது.
ஆட்டத்தின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில் பாடும்மீன் அணியின் பின்கள வீரர்களின் பந்துப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவரின்போது பந்தைப் பெற்ற ரட்னம் அணி, சிறந்த முறையில் எதிரணியின் கோல் வரை சென்றது. எனினும் கோல் காப்பாளர் ப்ரதீபன் பந்தைத் தட்டி ரட்னமின் வாய்ப்பைத் தடுத்தார்.
முதல் பாதி நிறைவுற சில நிமிடங்களே இருக்கும் பொழுது, பாடும்மீன் அணியின் சான்தன் வேகமாக உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு சற்று அண்மித்து வௌியே சென்றது. எனவே அவர்களது முதல் பாதியின் இறுதி முயற்சியும் நழுவவிடப்பட்டது.
அதே நிமிடத்தில் ரட்னம் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சிறந்த நிறைவைக் கொடுக்கவில்லை. அத்தோடு முதல் பாதி நிறைவு பெற்றது.
முதல் பாதி : ரட்னம் விளையாட்டுக் கழகம் 01 – 00 பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகி 4ஆவது நிமிடத்தில் தனக்கு வழங்கப்பட்ட பந்தை சசன்க சிறப்பாகப் பெற்று, முன்னே கொண்டு வந்து, ஆகிலுக்கு சிறந்த முறையில் பரிமாறினார். அதன்போது ஆகில் கோல்களுக்காக தட்டியபோது, பந்து பாடுமீனின் கோல் காப்பாளர் கைகளுக்கு செல்ல, அவர் அதனை இலகுவாகப் பிடித்தார்.
அதற்கு மூன்று நிமிடங்கள் கடந்த நிலையில், எதிரணியின் கோல் பரப்பை முழுமையாக ஆக்கிரமித்த பாடும்மீன் அணியின் முன்கள வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். அதன்போது அவர்களுக்கான கோல் வாய்ப்புகள் இருந்தும், அவை சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கெலிஓய கால்பந்து அணி
அதன் பின்னர் பாடும்மீன் அணி வீரர்கள் பல முறை கோலை நோக்கி அடித்த பந்தை, கோல் காப்பாளர் ஷெஹான் சிறந்த முறையில் தடுத்தார்.
பாடும்மீன் அணி வீரர் ஜயரட்னம், எதிரணி வீரர் ஒருவரை முறையற்ற விதத்தில் மோதியமையினால், 56ஆவது நிமிடத்தில் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
62ஆவது நிமிடம் ரட்னம் அணியின் முன்கள வீரர்களின் பந்துப் பரிமாற்றத்தின் பின்னர், இறுதியில் பந்து ஆகிலின் கால்களுக்கு வந்தது. அவர் கோல் கம்பங்களுக்கு மிக அண்மையில் பந்தைப் பெற்றார். எனினும் நடுவரால் அவருக்கு ஓப் சைட் காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் ரட்னம் வீரர் மதுரங்க பல வீரர்களைத் தாண்டி நீண்ட தூரத்திற்கு பந்தை எடுத்துவந்து, பந்தை மற்றொரு வீரருக்கு பரிமாறும்பொழுது, பாடும்மீன் அணியின் கோல் காப்பாளர் ப்ரதீபன் சிறந்த முறையில் பாய்ந்து பந்தைப் பிடித்து.
ஒரு கட்டத்தில் இரு அணியின் வீரர்கள் சற்று மோதிக்கொள்ளும் அளவுக்கு போட்டி சூடு பிடிக்கவே, கொழும்பு ரசிகர்களின் உணர்வுகள் கோஷங்களாக வெளியாகின.
அதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாவது மஞ்சள் அட்டையாக ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பாடும்மீன் அணியின் ஜெரின்சனுக்கு நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
மிகவும் விறுவிறுப்பாகிய போட்டியில் ரட்னம் அணி வீரர் அப்துல் காதர் மிகவும் வேகமாக பந்தை கோலை நொக்கி அடிக்க, பந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே சென்றது.
போட்டியின் இறுதி நேரத்தில் இரு அணியினரும் கோலுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றைத் தடுக்கும் வகையில் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர்கள் சிறப்பாக செயற்பட்டமையினால், கோல்கள் எவையும் பெறப்படவில்லை.
எனவே, போட்டி நிறைவில் ரட்னம் அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் கட்ட அரையிறுதியிலும் ரட்னம் வெற்றி பெற்றமையினால் இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு அவ்வணி நேரடியாக தகுதி பெறுகின்றது.
எனவே மற்றைய அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ள கெலிஓய கால்பந்து கழகத்துடன் ரட்னம் அணி இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
முழு நேரம்: ரட்னம் விளையாட்டுக் கழகம் 01 – 00 பாடும்மீன் விளையாட்டுக் கழகம்
போட்டியின் பின்னர் thepapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்து தெரிவித்த வெற்றி பெற்ற ரட்னம் அணியின் பயிற்றுவிப்பாளர் பஸுல் ரஹ்மான், ”யாழ்ப்பாணத்தில் விளையாடியதை விட மோசமாகவே இன்று எமது வீரர்கள் விளையாடினர். இன்றைய விளையாட்டில் எனக்கு திருப்தி இல்லை. இதில் இருந்து மாற்றம் பெற வேண்டும். இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள கெலிஓய அணியையும் நாம் ஏனைய அணிகளைப் போன்றே மதிப்பிடுகின்றோம். எனவே, இறுதிப் போட்டிக்காகவும் தயாராக உள்ளோம்” என்றார்.
எதிரணியான பாடும்மீன் அணியின் பயிற்றுவிப்பாளர் உதயனன் கருத்து தெரிவிக்கையில், ”இன்றைய போட்டியில் எதிரணியின் விளையாட்டு சிறப்பாக இருந்தது. அவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தினர். கோல் காப்பாளர் அவ்வணிக்காக சிறந்த முறையில் பங்காற்றியிருந்தார். எனினும் எமது வாய்ப்புக்கள் சிறந்த முறையில் நிறைவுசெய்யப்படவில்லை. இந்த மைதானமும் டிவிஷன் 2 தரத்திலான போட்டியொன்றை நடாத்துவதற்கு உகந்ததாக இல்லை” என்றார்.
கோல் பெற்றவர்கள்
ரட்னம் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஆகில் 24’
மஞ்சள் அட்டை
பாடும்மீன் விளையாட்டுக் கழகம் – ஜயரட்னம் 56’, ஜெரின்சன் 70‘