மன்ச்சீ பிஸ்கட் (Munchee) நிறுவன அனுசரணையில் நடைபெறும் மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் பொலன்னறுவை மாவட்டத்தின் சம்பியன்களாக இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எக்சத் ப்ரகதி கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
பொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியின் வெளிக்கள கரப்பந்துத் தொகுதியில் இன்று (14) இடம்பெற்ற இப்போட்டியில் பொலன்னறுவை மாவட்டத்தின் 8 கழகங்கள் பங்கு பற்றின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளின், இறுதிப்போட்டிக்கு சிவில் பாதுகாப்புப் படையும் இராணுவ வீரர்களின் “எக்சத் ப்ரகதி” அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இறுதிப்போட்டியின் முதல் செட்டை 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் எக்சத் ப்ரகதி அணி கைப்பற்றியதுடன் 2ஆவது செட்டை 25-22 எனும் கணக்கில் சிவில் பாதுகாப்புப் படையும் கைப்பற்றியது. தீர்மானமிக்க 3ஆவதும் இறுதியுமான செட்டில் சிறப்பாக விளையாடிய எக்சத் ப்ரகதி அணி 25-11 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியதுடன் போட்டியை 2-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றி பொலன்னறுவை மாவட்ட சம்பியன்களாக முடி சூடிக்கொண்டது.