பந்துவீச்சில் பிரகாசிக்கத் தவறியதால் தோல்வியடைந்தோம் – சகீப் அல் ஹசன்

203
Image Courtesy - Getty Images

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் சோபிக்கத் தவறியதால் தோல்வியைத் தழுவ நேரிட்டதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சகீப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்  கார்டிப் மைதானத்தில் நேற்று (08) நடைபெற்ற 12 ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

ஜேசன் ரோயின் அபார துடுப்பாட்டத்தோடு இங்கிலாந்து அணிக்கு வெற்றி

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, எதிரணியின் விக்கெட்டுக்களை விரைவில் கைப்பற்றி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

எனினும், அந்த எண்ணத்திற்கு மாறாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோவ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களைக் குவித்து புதிய மைல்கல்லையும் எட்டியிருந்தது.

இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இது இவ்வாறிருக்க, அந்த அணி சார்பாக அபாரமாக விளையாடி சதம் கடந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சகலதுறை ஆட்டக்காரரான சகீப் அல் ஹசன், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாத காரணத்தால் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,  

”உண்மையில், இந்த முடிவினால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். நாங்கள் பந்துவீசிய விதம் குறித்து திருப்தி அடைய முடியாது. முன்னதாக நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தோம்.

எனினும், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். அனைத்து கௌரவங்களும் அவர்களையே சாரும். அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவ்வாறு இன்னிங்ஸை ஆரம்பித்தார்களோ அதேபோல ஜோஸ் பட்லர் போட்டியை நிறைவுசெய்து கொடுத்தார். இதுதான் போட்டியின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது” என தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் இதே நடைமுறையைத் தான் பின்பற்றி வருகின்றனர். எனவே அதே நுட்பத்தை எந்தவொரு மாற்றமுமின்றி இம்முறை உலகக் கிண்ணத்திலும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே இது எப்போதும் எமக்கு கடினமானதாக இருக்கும் என்று நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்.

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக விளையாடவுள்ள ஜப்பான்

அதேபோன்று எதிரணயின் விக்கெட்டுக்களை சீரான இடைவெளியில் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தெரிந்து வைத்தோம். ஆனால் அதை இந்தப் போட்டியில் செய்ய முடியாமல் போனது. அதனால் தான் நாங்கள் தோல்வியைத் தழுவினோம் என்று அவர் குறிப்பிட்டார்

மேலும், 320 அல்லது 330 வரை ஓட்டங்களை நிர்ணயித்திருந்தால் அந்த இலக்கை எங்களால் துரத்தியடிக்க முடியும் என்று நினைத்தேன், ஆனால் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை நாங்கள் பெற்றோம். அந்த நேரத்தில் இன்னும் விக்கெட்டுக்களை வைத்துக் தக்கவைத்துக் கொண்டு 320 அல்லது 330 வரை ஓட்டங்களை துரத்தியடிப்பது இலகுவாக இருந்திருக்கும். ஆனால் 380 ஓட்டங்கள் என்பது எமக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றார்.

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் 3 ஆவது இலக்கத்தில் களமிறங்கி தொடர்ச்சியாக 3 அரைச் சதங்களைக் குவித்த சகீப், இந்தப் போட்டியில் தனது கன்னி உலகக் கிண்ண சதத்தைப் பூர்த்தி செய்தார். அத்துடன், தான் கடைசியாக விளையாடிய ஏழு இன்னிங்சுகளில் தொடர்ச்சியாக அரைச் சதங்களைக் குவித்து வந்த சகீப், 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஐந்து அரைச் சதங்களையும் குவித்திருந்தார்.

இந்த நிலையில், 3 ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சகீப் அல் ஹசன் பதிலளக்கையில்,

”இது வேறுபட்டது, உண்மையில் வேறுபட்ட சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டும், ஆனால் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கி ஓட்டங்களைக் குவிக்க முடிந்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆரம்பத்தில், நான் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டிலும் தான் அதிக கவனம் செலுத்தினேன். எனினும், தற்போது துடுப்பாட்டத்திலும் கூடுதல் பங்களிப்பு செய்ய கிடைத்தமை எனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பம் என கருதுகிறேன்.

இலங்கை A அணியின் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிய இந்தியா

எனவே இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதேபோன்று, இந்தத் தொடரில் இன்னும்  அதிக போட்டிகளில் நாங்கள் விளையாடவுள்ளோம் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கையுடன் மோதுகிறது. இங்கிலாந்து அணி 14 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்கிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<