சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றவரும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டியில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய புனித பேதுரு கல்லூரி அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று (28) நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணியின் தலைவர் சந்தூஷ் குணதிலக்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணி ஆரம்பத்தில் தடுமாறியிருந்ததுடன், ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரன்மித் ஜயசேன மற்றும் தினித் அஞ்சுல, 88 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்திருந்தனர்.
இதன்படி, புனித பேதுரு கல்லூரி அணி 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.
அவ்வணி சார்பாக மத்திய வரிசையில் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடிய தினித் அஞ்சுல 50 ஓட்டங்களையும், ரன்மித் ஜயசேன 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
>> மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் திருவிழா புதுப்பொழிவுடன் <<
பந்துவீச்சில் தர்ஸ்டன் கல்லூரி அணி சார்பில் யெஷான் விக்ரமராரச்சி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அயேஷ் ஹர்ஷன 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 16 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
அவ்வணி சார்பாக சவன் பிரபாஷ் 39 ஓட்டங்களையும், ஜயவிஹான் மஹிவிதான 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் புனித பேதுரு கல்லூரியின் கனிஷ்க மதுவந்த 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி – 164 (41.1) – தினித் அஞ்சுல 50, ரன்மித் ஜயசேன 47, யெஷான் விக்ரமராரச்சி 3/17, அயேஷ் ஹர்ஷன 3/28
தர்ஸ்டன் கல்லூரி 148 (45.4) – சவன் பிரபாஷ் 39, ஜயவிஹான் மஹவிதான 31, ஜனுஷ்க பெர்னாண்டோ 23, கனிஷ்க மதுவந்த 4/32, சச்சின் சில்வா 2/21, சந்தூஷ் குணதிலக்க 2/35
முடிவு – புனித பேதுரு கல்லூரி 16 ஓட்டங்களால் வெற்றி