பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரில் இன்று ஐந்து போட்டிகள் ஆரம்பமாகின. அவற்றில் இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது புனித ஜோசப் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, லும்பினி கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரி அணிகள் வலுவான நிலையில் உள்ளன.
புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி
மொரட்டுவை செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் ஹரீன் கூரே முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இதன்படி களமிறங்கிய அவரது அணி, வலது கை துடுப்பாட்ட வீரர் தினேத் மதுராவெல ஆட்டமிழக்காமல் விளாசிய அபார சதம் (107), ஜெஹான் பெர்னாந்துப்பிள்ளை பெற்றுக்கொண்ட அரைச்சதம் (73) என்பவற்றின் துணையுடன், 64 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்று வலுவான நிலைக்குச் சென்றிருந்த போது, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.
இன்று பந்து வீச்சில் செபஸ்டியன் கல்லூரி அணி சிறப்பாக செயற்படவில்லை. எனினும், அவ்வணிக்காக தஷிக் பெரேரா, அசாரு வர்ணகுலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த செபஸ்டியன் கல்லூரி அணி, 26 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. அவ்வேளையில், சிறப்பாக செயற்பட்டிருந்த நிமேஷ் பண்டார ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களுடன் நின்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி: 319/7d (64), தினேத் மதுரவல 107*, ஜெஹான் பெர்னாந்துப்பிள்ளை 73, நிப்புன் சுமனசிங்க 46, ஹரீன் கூரே 33*, தஷிக் பெரேரா 2/70, அசரு வர்ணகுலசூரிய 2/75
புனித செபஸ்டியன் கல்லூரி: 100/2 (26), நிமேஷ் பண்டார 56*, நுவனிந்து பெர்னாந்து 36
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்
புனித செர்வாடியஸ் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி
பலம் மிக்க பாடசாலை அணிகளில் ஒன்றான தர்ஸ்டன் கல்லூரி அணியுடன், மாத்தறை செர்வாடியஸ் கல்லூரி அணி மோதிய இப்போட்டி மாத்தறை உயன்வத்த மைதானத்தில் ஆரம்பமாகியது.
இன்றைய ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த தர்ஸ்டன் கல்லூரி அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கினார். இதன்படி களமிறங்கிய அவர்கள், ஆரம்பம் முதல் தடுமாறினர். எனினும், சுபுன் கவிந்த பெற்றுக்கொண்ட 46 ஓட்டங்களின் துணையுடன், தமது முதல் இன்னிங்சிற்காக 41.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில், தர்ஸ்டன் கல்லூரிக்காக ஜனுஸ்க பெர்னாந்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, கடந்த போட்டியில் ஒரு இன்னிங்சின் அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்திய நவீன் குணவர்தன, பிம்சர ரணதுங்க, யெஷான் விக்கிரமாரச்சி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை அவ்வணிக்காக கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணி, 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 37 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் போட்டியில் மழை குறுக்கிட்டது. மழை நீடித்த காரணத்தினால் இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
புனித செர்வாடியஸ் கல்லூரி : 123 (41.1), சுபுன் கவிந்த 46, சஷிக திஷான் 27, ஜனுஸ்க பெர்னாந்து 3/15, யெஷான் விக்கிரமாரச்சி 2/19, நவீன் குணவர்தன 2/22, பிம்சார ரணதுங்க 2/29
தர்ஸ்டன் கல்லூரி: 37/1 (12)
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்
ஆனந்த கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி
கொல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லும்பினி கல்லூரி அணியின் தலைவர், ஆனந்த கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
இதன்படி களமிறங்கிய அவர்கள் லும்பினி கல்லூரி அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாமல், 60.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டனர்.
ஆனந்த கல்லூரி சார்பாக அதிகபட்சமாக கவிந்து கிம்ஹான் 37 ஓட்டங்களை பெற்றிருந்தார். மறு முனையில் வலது கை சுழல் பந்து வீச்சாளரான தனுக்க தாபரே 45 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை லும்பினி கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.
பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த லும்பினி கல்லூரி அணி, பந்து வீசிலும் சிறப்பித்திருந்த தனுக்க தாபரே ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் இன்றைய ஆட்டநேர நிறைவின் போது 4 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றிருந்தது. சமிக்க குணசேகர மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி: 130 (60.1), கவிந்து கிம்ஹான் 37, சுபுன் வரகொட 29, சஹான் சுரவீர 25, தனுக்க தாபரே 4/45, விமுக்தி குலதுங்க 3/28
லும்பினி கல்லூரி: 99/4(34), தனுக்க தாபரே 53*, சமிக்க குணசேகர 3/27
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்
புனித தோமியர் கல்லூரி எதிர் குருகுல கல்லூரி
தோமியர் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய குழு C இற்கான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தோமியர் கல்லூரி அணி, சிறப்பான ஆரம்பம் ஒன்றினை காட்டியது. அதன்படி அவ்வணி, தமது முதல் இன்னிங்சிற்காக 68.5 ஓவர்களில் 248 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அதிகபட்சமாக துலிப் குணரத்ன 45 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில், உதார ரவிந்து 41 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார்.
பின்னர், குருகுல கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சிற்காக 24 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி: 248 (68.5), துலிப் குணரத்ன 46, ரவிந்து கொடித்துவக்கு 35, இஷான் பெரேரா 32, உதார ரவிந்து 5/41, பத்தும் மஹேஷ் 2/25
குருகுல கல்லூரி: 71/4 (24), தினுர குணரத்ன 2/17
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்
தர்மராஜ கல்லூரி எதிர் புனித மரியார் கல்லூரி
பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கேகாலை புனித மரியார் கல்லூரி அணியின் தலைவர், கண்டி தர்மராஜ கல்லூரிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை வழங்கினார்.
இதன்படி தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவ்வணி, தேஷான் குணசிங்க பெற்றுக்கொண்ட அரைச்சதம் கடந்த 52 ஓட்டங்களின் துணையுடன், 59.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 210 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது.
லசித்த உதாகே 73 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், திமிற குமார 37 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் இன்றைய நாளில் புனித மரியார் கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த மரியார் கல்லூரி அணி 35 ஓவர்களை எதிர்கொண்டு 108 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இன்று அவ்வணிக்காக ராஜித கொடுவேகொட 37 ஓட்டங்களினை பெற்றுத்தந்த வேளையில் தர்மராஜ கல்லூரிக்காக செட்டிய ஏக்கநாயக்க இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
தர்மராஜ கல்லூரி: 210 (59.1), தேஷான் குணசிங்க 52, சச்சிஞ்த சேனநாயக்க 34, நிவந்த ஹேரத் 23, லசித்த உதாகே 4/73, திமிர குமார 3/37
புனித மரியார் கல்லூரி: 108/4 (35), ராஜித கொடுவேகொட 37, சஜீவ ரன்ஜித் 31, செட்டிய ஏக்கநாயக்க 2/10
போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்