லண்டனில் நடைபெற்றுவரும் 8ஆவது உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை தினேஷ் பிரியந்த ஹேரத் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத், 57.93 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது அவர் பெற்றுக்கொண்ட 2ஆவது சர்வதேச பதக்கமாகும்.
கடந்த வருடம் நடைபெற்ற றியோ பராலிம்பிக்கில் இதே போட்டிப் பிரிவில் கலந்துகொண்ட தினேஷ், 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன், அது பராலிம்பிக் போட்டி வரலாற்றில் இலங்கை பெற்றுக்கொண்ட இரண்டாவது பதக்கமாகவும் பதிவானது.
முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரதீப் சஞ்ஜய மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் ஒன்றைப் பெற்றார்.
22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்
இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள காலிங்கா மைதானத்தில் நிறைவடைந்த…
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரரான ஹேரத், கடந்த வருடம் ஜேர்மனியில் நடைபெற்ற பரா க்ரேன்ட் பிரிக்ஸ் போட்டிகளில் 53.69 மீற்றர் தூரம் எறிந்து றியோ பராலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்திய சுந்தர் சிங் குர்ஜார் 60.36 மீற்றர் தூரம் எறிந்து இந்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் குவோ சுன் லியாங் 56.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கையின் அமரா இந்துமதி பெற்றுக்கொண்டார். எனினும் முன்னதாக நடைபெற்ற ரி 45-46-47 பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் கலந்துகொண்ட அவர், கடைசி இடத்தைப் பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தார்.
அதேபோன்று, ரி 42 பிரிவின் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட அனில் பிரசன்ன போட்டித் தூரத்தை 25.88 வினாடிகளில் நிறைவு செய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
>> மேலும் பல செய்திகளைப் படிக்க <<