டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் F46 போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கையின் தினேஷ் பிரியன்த ஹேரத் புதிய வரலாறு படைத்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது.
>> டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல காத்திருக்கும் தினேஷ்
இதில் போட்டிகளில் ஆறாவது நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரயன்த ஹேரன் பங்குகொண்டார்.
ஆறு சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 62.58 மீட்டர் தூரம் வீசி, தனது அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்த தினேஷ், அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 62.19 மீட்டர் தூரத்தை வீசினார். இதனையடுத்து மூன்றாவது முயற்சியில் 67.79 மீட்டர் தூரத்தை வீசிய அவர், புதிய உலக சாதனை படைத்தார்.
முன்னதாக இந்தியாவின் தேவேந்திர 2016 ரியோ ஒலிம்பிக்கில் நிகழ்த்திய உலக சாதனையை (63.97 மீட்டர்) நான்கு மீட்டரால் தினேஷ் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, நான்காவது முயற்சியில் 62.06 மீட்டர் தூரத்தை தினேஷ் பதிவுசெய்தாலும் ஐந்தாவது முயற்சியில் ஏமாற்றம் அளித்தார். இறுதியில் தன்னுடைய அதிகபட்சமான 67.79 மீட்டர் தூரத்துடன் இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
>> Photos: Tokyo Paralympic Games 2020 – Day 3
இறுதியாக 2016 ரியோ பாராலிம்பிக்கில் தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தது. முன்னதாக, 2012 லண்டன் பாராலிம்பிக்கில் பிரதீப் சஞ்சன, ஆண்களுக்கான T46 பிரிவு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், 2016 ரியோ பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
>> படகோட்டம் நிரல்படுத்தல் போட்டியிலும் மஹேஷுக்கு ஏமாற்றம்
இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இலங்கை 42ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இதுஇவ்வாறிருக்க, தினேஷுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியனான இந்தியாவின் தேவேந்திர 64.35 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு இந்திய வீரரான குர்ஜார் சுந்தர் சிங் 64.01 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<