தினேஷ் கார்த்திக்கிற்கு RCB அணியில் புதிய பதவி

129

ஐபிஎல் தொடரில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக், இந்தாண்டு மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து ஐசிசி அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அவருக்கு RCB அணி நிர்வாகம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து RCB அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் புதிய அவதாரத்தில் திரும்பியுள்ளார். எல்லா வகையிலும் எங்கள் விக்கெட் காப்பாளரை வரவேற்கிறோம். கிரிக்கெட்டிலிருந்து வீரனை வெளியேற்றலாம் ஆனால் வீரனிடம் இருந்து கிரிக்கெட்டை பிரிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது கிடைத்த இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, ‘நான் இந்த கடைசி 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டதற்கு உங்களது ஆதரவு தான் முழு காரணம். அதற்கு நன்றி. இந்த உலகில் மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட அணியாக RCB அணி உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த அணிக்கு ஆதரவு உள்ளது. T20 உலகக் கிண்ணத் தொடர் முடிந்து நியூயோர்க்கில் இருந்து நான் இந்தியா திரும்பியதும் என்னை முதலில் சந்தித்த ஒருவர் RCB ரசிகர் தான்.

தற்போது நான் RCB அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய உங்களின் ஆதரவு வரும் காலங்களிலும் தேவை.

ஆர்சிபி அணி ஐபிஎல் பட்டத்தை வெல்லாதது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல தடவைகள் சம்பியன் பட்டத்தை நெருங்கி வந்தும் அதனை கைப்பற்ற முடியவில்லை. ஒரு துடுப்பாட்டப் பயிற்சியாளாராக விரைவில் RCB அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதில் நான் உறுதியளிக்கிறேன்’ என்று தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

2004 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடினார். தனது கிரிக்கெட் பயணத்தில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 1 சதம், 7 அரைச் சதங்கள் உட்பட 1025 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மேலும் 57 பிடியெடுப்புகளையம், 7 ஸ்டம்பிங்களை அவர் செய்துள்ளார்.

அதேபோல, 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 9 அரைச் சதங்களுடன் 1752 ஓட்டங்கள், 64 பிடியெடுப்புகள், 7 ஸ்டம்பிங்களை அவர் மேற்கொண்டுள்ளார். சர்வதேச T20i போட்டியில், இந்தியாவுக்காக 60 போட்டிகளில் களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக், 686 ஓட்டங்கள், 30 பிடியெடுப்புகள், 8 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக 257 போட்டிகளில் விளையாடி 22 அரைச் சதங்களுடன் 4842 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<