இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் வியாழக்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை மறந்து ஆட வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை அணி காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 304 ஓட்டங்களால் மோசமான தோல்வி ஒன்றை சந்தித்தது. அணி வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் இந்தியாவிடம் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் முதல் டெஸ்டில் நிமோனியா காய்ச்சல் காரணமாக விளையாடாத அணித்தலைவர் சந்திமால் நாளைய போட்டியில் விளையாடவுள்ளார். “கடந்த போட்டியில் நாம் செய்த தவறுகளை மறந்துவிட்டு நல்ல மனநிலையுடன் முன்னேற வேண்டும். இதனையே நான் எப்போது வீரர்களிடம் கூறுகிறேன். வீரர்களும் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்” என்று இரண்டாவது டெஸ்ட் போட்டி பற்றி விளக்கும் ஊடக சந்திப்பில் சந்திமால் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் வாய்ப்பை தட்டிப் பறித்த இலங்கை
இந்நிலையில் ஐ.சி.சியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் 2017ஆம் – 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டி அட்டவணையை அறிவித்து வருகின்றன.
காலி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஓவர் ஒன்றுக்கு சராசரியா 4.5 ஓட்டங்கள் வீதம் மொத்தம் 840 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இலங்கை அணியால் இந்தியாவின் 13 விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது. இவ்வாறான பந்துவீச்சு தந்திரத்துடன் இலங்கை அணியால் இரண்டாவது டெஸ்டில் விளையாட முடியாதிருக்கும். எனவே அணி தனது பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
“இந்தியா போன்ற சிறந்த அணிகளோடு விளையாடும்போது பந்து வீச்சு, துடுப்பாட்டத்தில் துணிந்து ஆடுவது அவசியமாகும். அவ்வாறு செய்தாலேயே சிறந்த பெறுபேறுகளை பெற முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலி டெஸ்டிலும் நான் அவ்வாறே செயற்பட்டேன்” என்று சந்திமால் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு இந்திய அணி கடைசியாக இலங்கைக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்த போது காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 59 ஓட்டங்களைப் பெற்ற சந்திமால் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 169 பந்துகளில் 162 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் SSC மைதானம் இலங்கை அணிக்கு அதிக பரீட்சயம் கொண்ட இடமாகும். இங்கேயே இலங்கை அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. காய்ந்த புற்களுடன் காணப்படும் SSC ஆடுகளம் காலி ஆடுகளத்தை விடவும் அதிகம் உலர்ந்து இருப்பதால் பந்து அதிகம் சுழல்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நடந்த மிக அண்மைய டெஸ்டில் ஐந்து சதங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இலங்கை அணி மேலதிக பந்துவீச்சாளர் ஒருவருடன் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக இரண்டாவது டெஸ்டின் மூலம் சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமாரவுக்கு தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
“உலர்ந்த ஆடுகளத்தையே எம்மால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் இந்த போட்டியில் விளையாட மலிந்தவுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அசேல குணரத்னவின் இடத்திற்கு தனன்ஜய டி சில்வா கடைசி பதினொருவர் குழாமில் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன” என்று நாளைய போட்டியில் இலங்கை குழாமின் மாற்றங்கள் குறித்து சந்திமால் விளக்கினார்.
இதன்படி டி சில்வாவுக்கு அணியில் இடம் கிடைத்தால் இலங்கை அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. 13 மாதங்களுக்குப் பின் அணிக்கு திரும்பி இருக்கும் லஹிரு திரிமான்ன இரண்டாவது டெஸ்டில் களமிறங்க எதிர்பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் முதல் இரண்டரை நாட்களும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
“திரிமான்ன அதிக அனுவம் கொண்ட வீரர். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான ஒரு வீரர். அவர் அணிக்கு திரும்பி இருப்பது துடுப்பாட்ட வரிசையில் அணிக்கு மிகப்பெரிய பலமாகும். அணி வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுவதே அணி வீரர்கள் அனைவரினதும் ஒரே இலக்காக உள்ளது. அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் கடந்த ஓரிரு நாட்களில் அணியாக நாம் மேற்கொண்டிருக்கிறோம்” என்று சந்திமால் மேலும் கூறினார்.
இலங்கை – இந்திய இடையிலான இரண்டாவது டெஸ்ட் குறித்த ஒரு பார்வை
மறுபுறம் SSC டெஸ்டில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரை தேர்வு செய்வதில் இந்திய அணி தடுமாற்றம் கண்டுள்ளது. எவ்வாறாயினும் ஆரம்ப வீரராக லோகேஷ் ராகுலின் இடம் உறுதியானதாகும். அவரது அண்மைய ஆறு இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டால் பங்களாதேஷுடனான 90 ஓட்டங்கள் உட்பட ஆறு அரைச்சதங்களை பெற்றுள்ளார்.
முதல் டெஸ்டில் ராகுல் சுகவீனம் உற்றதால் அணிக்கு அழைக்கப்பட்ட ஷிகர் தவான் அதிரடி சதத்தை பெற்றது மற்றும் மறுமுனை ஆரம்ப வீரர் அபினேவ் முகுந்த் 81 ஓட்டங்களை பெற்று திறமையை காட்டியதாலேயே யாரை தேர்வு செய்வது என்பதில் அணித்தலைவர் விராட் கோலி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
“நிச்சயமாக ராகுல் எமது நிரந்தர ஆரம்பத் துப்பாட்ட வீரர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்ட திறமை சிறப்பாக இருக்கும் நிலையில் மற்றும் ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கே இடம் உள்ளது. இது பற்றி நாம் ஆலோசித்து வருகிறோம். பயிற்சிக்குப் பின்னர் அணி கூட்டம் நடைபெறவிருக்கிறது. அப்போது இது பற்றி முடிவொன்றை எடுப்போம். என்றாலும் என்னை பொறுத்தவரை ராகுல் பதினொருவர் குழாமில் நிச்சயம் இடம்பிடிப்பார்” என்று இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி குறிப்பிட்டார்.