இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீது சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.) அதனது சட்டக்கோவை 2.2.9 இணை மீறி பந்தின் தன்மைகளை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தியிருக்கின்றது.
இலங்கை அணி, சென்.லூசியாவில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இலங்கை அணியினர் மைதானத்திற்குள் வர மறுத்த காரணத்தினால் இரண்டு மணி நேரங்கள் தாமதித்தே ஆரம்பித்திருந்தது. இலங்கை அணி போட்டியினை தாமதமாக்க காரணம் ஆட்ட நடுவர்களான (Umpires) அலீம் தார் மற்றும் இயன் கூல்ட் ஆகியோர் இலங்கையின் வீரர்கள் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தலில் ஈடுபட்டதாக கூறி ஐந்து மேலதிக ஓட்டங்களை (Penalty Runs) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்ததும், ஆட்டத்திற்கு முன்னர் வேறு பந்தினை எடுக்க முயன்றதுமாகும்.
இந்த மேலதிக ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு கொடுக்கப்பட்ட காரணத்தினால், 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட அவ்வணியின் மொத்த ஓட்டங்கள் போட்டியின் மூன்றாம் நாளில் 118 இலிருந்து 123 ஆக அதிகரித்துக் கொண்டன.
இந்த சம்பவம் தொடர்பான சர்ச்சைகள் உருவாகிய நேரத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகத்தர்கள் போட்டி நடுவர்களுடனும், மத்தியஸ்தரான (Referee) ஜவகால் சிறினாத்துடனும் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடாத்தி மீண்டும் உடைமாற்றும் அறைக்கு நடந்திருந்தனர்.
இறுதியாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தமது வீரர்களிடம் , “ போட்டி தொடர்ந்து நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் “ என கேட்டுக் கொண்டதுக்கு அமைவாக போட்டி தொடர்ந்தது. தொடர்ந்த போட்டியில் இந்த சுற்றுத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இலங்கை கிரிக்கெட் சபை “ அணியின் வீரர்களுக்கு எதிராக தவறான குற்றாச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிகழ்வுகள் நடைபெறுமெனில் “ அந்த விடயத்தில் இலங்கை வீரர்களுக்கு தமது முழு ஆதரவையும் வழங்கும் என கூறியிருந்தது. இலங்கை அணிக்கு தமது வீரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மீளாய்வு செய்வதற்கான அதிகாரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் மறுத்திருக்கின்றார். எனினும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களை ஆய்வு செய்யும் சந்திப்பொன்றினை இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் நடத்துவதற்கு மத்தியஸ்தரான சிறினாத் திட்டமிட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எடுக்கப்படட்ட காணொளி ஆதாரத்தின் மூலமே ஐ.சி.சி. சந்திமாலை குற்றவாளியாக இனம் கண்டிருக்கின்றது. இந்த காணொளியில் தினேஷ் சந்திமால் பந்தில் அதன் தன்மையை மாற்ற செயற்கை பதார்த்தம் ஒன்றினை பிரயோகிப்பதற்கு முன்னர் தனது இடதுகைப்பைக்குள் இருந்து இனிப்பு பண்டங்களை எடுத்து வாயில் போடுவது பதிவாகியிருக்கின்றது.
இந்த காணொளி ஆதாரம், போட்டியின் பின்னர் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது சமர்ப்பிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் போட்டியின் உத்தியோகத்தர்களோடு இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவ உறுப்பினர்களும் பங்குபெறவிருக்கின்றனர்.
தினேஷ் சந்திமால் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் இரண்டாம் தரத்தினை (Level 2) சேர்ந்த விதிமீறல் என்பதால் அவருக்கு போட்டிக் கட்டணத்தினை முழுமையாகவோ அல்லது அரைவாசியாகவோ இழக்க நேரிடும். இதுமட்டுமின்றி அவருக்கு போட்டித் தடை புள்ளிகளும், நன்னடத்தை விதிமீறல் புள்ளிகளும் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.