அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச்சதத்தை அடித்து இலங்கை அணியின் அனுப துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் சாதனையை பதிவுசெய்துள்ளார்.
போட்டியின் நான்காவது நாள் ஆட்டநேரத்தில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 554 ஓட்டங்களை பெற்று, 190 ஓட்டங்களால் முன்னிலையை பெற்றுக்கொண்டது.
>> இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறும் பெதும் நிஸ்ஸங்க
அதன்படி இன்றைய தினம் தன்னுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச்சதத்தை பதிவுசெய்த தினேஷ் சந்திமால், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை வீரர் பதிவுசெய்த முதலாவது இரட்டைச்சதம் என்ற சாதனையையும், அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையையும் பதிவுசெய்தார்.
இதற்கு முதல் குமார் சங்கக்கார அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோர்பட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 192 ஓட்டங்களை பதிவுசெய்திருந்துடன், குசல் மெண்டிஸ் பல்லேகலையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களை பெற்றிருந்தார். குறித்த இந்த சாதனையை தினேஷ் சந்திமால் இன்றைய தினம் முறியடித்துள்ளார்.
தினேஷ் சந்திமால் 326 பந்துகளை எதிர்கொண்டு 206 ஓட்டங்களை பதிவுசெய்ததுடன் 5 சிக்ஸர்கள் மற்றும் 16 பௌண்டரிகளையும் பதிவுசெய்தார்.
அதேநேரம் இலங்கை அணியானது 554 ஓட்டங்களை குவித்து, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவுசெய்து சாதனை படைத்திருந்தது. இதற்கு முதல் 1992ம் ஆண்டு கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 547 ஓட்டங்களையும், 2011ம் ஆண்டு இதே மைதானத்தில் 473 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<