டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

West Indies tour of Sri Lanka 2021

1029

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, ஐசிசியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள், இந்தியா – நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ்- பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்த நிலையில், வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை ஐசிசி இன்று (01) வெளியிட்டுள்ளது.

ஐசிசியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையின் படி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் டெஸ்ட் தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருந்த திமுத், முதல் டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட சதம் மற்றும் அரைச்சதம் என்பவற்றின் காரணமாக 4 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, ஐசிசியினால் வெளியிடப்படுள்ள துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஒரு இடம் சரிந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதேநேரம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்ட நியூசிலாந்து வீரர் டொம் லதம் ஒன்பது இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேசமயம், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி மூன்று இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தையும், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஒன்பது இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரகாசித்த லசித் எம்புல்தெனிய 37ஆவது இடத்தையும், பிரவீன் ஜயவிக்ரம 44ஆவது இடத்தையும், ரமேஷ் மெண்டிஸ் 57ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<